கேள்வி: தேர்தல் அறிக்கைக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்படுவதற்கும் வித்தியாசம் உண்டா? சலீம் கான், விழுப்புரம்
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவது குறித்து தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறினால் அவரை ஆதரிப்பதாக நாம் கூறினோம். ஆனால் அவர் தேர்தல் அறிக்கையில் அதைக் கூற மறுத்து விட்டார். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
தேர்தல் அறிக்கையில் சொல்வதும் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதும் சமம் தான் என்று அதிமுகவிடம் மூனு சீட்டு வாங்கியவர்களும் மற்றும் சிலரும் நியாயப்படுத்தினார்கள். நம்முடைய அனுபவத்தில் கண்ட உண்மைகள் அடிப்படையில் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்று நாம் கூறி வந்தோம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கவர்னர் உரையிலும் முதல்வரின் பேட்டிகளிலும் தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றுவோம் என்று தான் சொல்லப்பட்டதே தவிர தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னதையும் நிறைவேற்றுவோம் என்று சொல்லக் காணோம்.
மேலும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு பற்றி முதல்வர் வாய் திறப்பதாகத் தெரியவில்லை. மூனு சீட்டுக்குத் தாளம் போட்டவர்கள் அம்மா தருவார்கள் என்று கூறுகிறார்களே தவிர தேர்தல் வாக்குறுதியில் சொன்னது என்னவானது என்று தட்டிக் கேட்கத் துப்பில்லாமல் உள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதை நிறைவேற்றும் கடமை தான் தங்களுக்கு உள்ளதாக அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள் என்பதும் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதைப் பொருட்டாக அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை என்பதும் இதில் இருந்து உறுதியாகிறது.
மூனு சீட்டுக்காக கூட்டு வைத்தவர்கள் இதற்காகப் போராட்டம் நடத்தி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்திப் பெற்றுத் தருகிறார்களா என்று சமுதாயம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் செய்யத் தவறினால் தவ்ஹீத் ஜமாஅத் வரலாறு காணாத அளவுக்கு மக்களைத் திரட்டி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்திக் கேட்டு களம் இறங்கத் தயங்காது.
உணர்வு 15:46
உணர்வு 15:46