தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

இஸ்லாத்தில் பாட்டுப்பாடுவது கூடுமா?

பாடல்களைப் பொறுத்த வரை நல்ல கருத்துள்ள பாடல்களாக இருந்தால் அவற்றை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆபாசமான மற்றும் தவறான கருத்துக்கள் அடங்கிய பாடல்களை இஸ்லாம் தடை செய்கின்றது. நற்கருத்துகள் அடங்கிய பாடல்களை இசையின்றி பாடுவதற்கு மட்டுமே அனுமதியுள்ளது. பின்வரும் செய்திகள் இதற்கு ஆதாரங்களாக உள்ளன.
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) "எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்'' (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து  பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, "எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், "இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்'' என்று கூறினார்கள். புகாரி (4001)
மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை. இறைவனுக்கு மட்டுமே இந்த ஞானம் இருக்கின்றது. முஹம்மது
-265-
(ஸல்) அவர்களால் நாளை நடப்பதை அறிய முடியும் என்ற தவறான கருத்தை சிறுமி பாடிய போது அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கிறார்கள். இதைத் தவிர்த்து விட்டு மற்றவற்றைப் பாடுமாறு அனுமதி கொடுக்கிறார்கள்.
 எனவே தவறான கருத்துள்ள பாடல்களைப் பாடுவது கூடாது. நற்கருத்துள்ள பாடல்களை மட்டுமே பாடலாம்.
இந்தச் சம்பவத்தில் சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்து இசைத்ததாகக் கூறப்படுகின்றது. எனவே இசைக்கருவிகளைப் பயன்படுத்தி பாடுவதற்கு அனுமதியுள்ளது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
இசைக்கருவிகளை இஸ்லாம் தடுத்துள்ளது என்பதை முன்பே பார்த்தோம். திருமணம் பெருநாள் போன்ற சந்தோஷமான நேரங்களில் மட்டும் கஞ்சிராக்களை அடித்து பாடுவது அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. கஞ்சிராக்களுக்கு மட்டுமே இந்த அனுமதி உள்ளது. இந்த நேரங்களில் கஞ்சிராக்கள் அல்லாத தற்காலத்தில் உள்ள புதுபுது இசைக் கருவிகளைப் பயன்படுத்துவது கூடாது. இதைப் பின்வரும் சம்பவமும் விளக்குகின்றது.
ஆயிஷா  (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது. நூல்: முஸ்லிம் 1619
சைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸம் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
அதே நேரத்தில் பெருநாள் தினத்தில் மட்டும் இதற்கு அனுமதி உள்ளது என்பதால் இவ்வாறு செய்பவர்களைத் தடுக்கக் கூடாது.
பின்வரும் செய்திகளும் நற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்று கூறுகின்றது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து, அவளை அவ)ரிடம் அனுப்பி வைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள்.
புகாரி (5162)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன "அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே'' என்னும் சொல் தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா பின் அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்து விட்டார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (3841)
ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ்ச் ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம் (தெரியும்)'' என்றேன். "பாடு'' என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன். முஸ்லிம் (4540)
நற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பவளப் பாறைகள்


மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாகவும், அதிகமாகவும் உயிர் வாழ பேருதவியாக இருப்பது பவள உயிரிகள் எனப்படும் பவளப்பாறைகள்.  இவை முழுமையான சுண்ணாம்புக் கற்களால் ஆன ஒரு உயிரினமாக இருந்தாலும் மற்ற நுண்ணுயிரிகளைத்தான் உணவாக உட்கொண்டு வளர்ந்து வருகின்றன. பொதுவாக பவளப் பாறைகளை ஒரு வகையான விலங்கு அல்லது தாவரம் எனவும் சொல்லலாம். இப்பாறைகளில் உள்ள பாலிப்ஸ் என்ற உயிரினம் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும்.  இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.கடலில் ஆழமில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும் பவளப் பாறைகள் குழிமெல்லுடலிகள் என்ற வகையை சேர்ந்த உயிரினங்களாகும்.  இவற்றின் இளம்பருவம் பிளானுலா எனப்படுகிறது.கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து பின்னர் வளர்ச்சியடைந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்து பாலிப் கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் இருக்கும். பாலிப் உயிரினம் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் வெளியேற்றுகின்றன.  இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் சிறிய விலங்கின மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.இவற்றின் இருபாலின உறுப்புக்களும் ஒரே உயிரியில் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கிறது.பாலிப்ஸ் என்ற உயிரி இறந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன.இவை சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது.  இந்தியாவில் மட்டும் 200 வகைகள் இருக்கும் இவற்றை கடினமானவை, மிருதுவானவை என இரு பிரிவுகளாகவும் பிரிக்கலாம். கடினமான வகை பவளப் பாறைகளில் மனிதமூளை வடிவம், மான்கொம்பு வடிவம்,மேஜை மற்றும் தட்டு வடிவம் ஆகியனவும் அடங்கும்.கடல் விசிறி உயிரினம் மிருதுவான பவளப்பாறை வகையை சேர்ந்தது. இவை பார்ப்பதற்கு செடிகள் அல்லது சிறு கொடிகள் போலவும் நீண்டும் காணப்படும்.  பவளப் பாறைகளை மையமாக வைத்துத்தான் பலவிதமான வண்ணமீன்கள் கண்களைக் கவரும் வகையில் சுமார் 250க்கு மேற்பட்டவையும் ,மெல்லுடலிகள்,கணுக்காலிகள் மற்றும் பாசிவகைகள் போன்றவையும் வளர்கின்றன. இவை தவிர பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது.  வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது. சுனாமி வந்த போது பவளப்பாறைகள் அதிகம் இருந்ததால் தான் ராமேசுவரம் பகுதி எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது.  தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது,கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன. இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும்,கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள்.  கடலுக்கு அடியில் கூட்டம்,கூட்டமாக அடர்ந்து, வளர்ந்து பெரிய மரங்களைப் போன்று காட்சியளித்து ஒரு பெரிய பூஞ்சோலையாகவே காட்சியளிக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் கடலுக்கு அடியில் உள்ள பவளப் பாறைகளை வண்ண மீன்களோடு இணைந்து பார்த்து ரசிக்க வனத்துறை கண்ணாடிப்படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் கடல் வளங்களை கண்குளிரக் கண்டு ரசிக்க முடியும்.

TNTJ யின் தேர்தல் நிலைபாடு குறித்து பரபரப்பான பேட்டி – இமயம் மற்றும் தமிழன் டிவியில்!

TNTJ யின் தேர்தல் நிலைபாடு குறித்து பரபரப்பான பேட்டி இமயம் மற்றும் தமிழன் டிவியில் நாளை முதல் ஒளிபரப்பாகின்றது. இது குறித்து அனைத்து மாவட்டம் கிளைகளிலும் பின்வரும் தகவலை நோட்டிஸாக வெளியிடவும்.
TNTJ யின் தேர்தல் நிலைபாடு குறித்து பரபரப்பான பேட்டி
———————————
இன்ஷா அல்லாஹ் 3-4-2011 முதல்..
ஞாயிறு,திங்கள்,செவ்வாய் ஆகிய கிழமைகளில் இமயம் டிவியில் இரவு 10.30 மணிக்கு.
திங்கள்,செவ்வாய்,புதன் ஆகிய கிழமைகளில் தமிழன் டிவியில் இரவு 9.0 மணிக்கு.
———————————
பாருங்கள் பார்க்கத் தூண்டுங்கள்

வருமான வரியை, இனி ஏ.டி.எம்.-ல் செலுத்தலாம்; புதிய வசதி அறிமுகம்



தற்போது வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் வங்கிகளுக்கு சென்று அதற்குரிய படிவத்தை நிரப்பி வரி செலுத்த வேண்டியதுள்ளது. பிறகு அதற்கான சிலிப்பை பெற்று கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
 
இந்த நடவடிக்கைகளால் வங்கிகளில் மார்ச் மாதம் கட்டுக் கடங்காத கூட்டம் திரண்டு வருகிறது. இதை தவிர்க்க இனி ஏ.டி.எம். மூலமாகவும் வரி செலுத்தலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு நேற்று முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது.
 
முதல் கட்டமாக யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.களில் இந்த நவீன வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இனி படிப்படியாக மற்ற வங்கி ஏ.டி.எம்.களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.   ஏ.டி.எம். மூலம் வருமான வரி செலுத்த விரும்புபவர்கள் வங்கி இணையத் தளத்தில் தங்கள் டோட் கார்டு மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 
அப் போது ஒரு எண் கொடுக்கப்படும். அதை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள குறியீடுகளை தட்டி பான் நம்பர் உள்பட கேட்கும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். எவ்வளவு ரூபாய் வருமான வரியாக பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பதிவு செய்ய வேண்டும்.
 
இதையடுத்து குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக பிடித்தம் செய்து கொள்ளும் ஏ.டி.எம். சிறப்பு எண் ஒன்றை கொடுக்கும். அந்த எண் உதவி கொண்டு வங்கி இணையத் தளத்தில் பதிவு செய்து வருமான வரி கட்டியதற்கான சான்றிதழை பெறலாம்.
 
இதன் மூலம் வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்து நிற்பதை வருமான வரி செலுத்துபவர்கள் தவிர்க்க முடியும்.

ஞாயிறு


குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி ”சேவா (Self Employed Women’s Association)” என்ற பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்பு வாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.’சேவா’-வின் பொதுச்செயலாளர் ரீமா பென் நானாவதி மும்பையில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கேல் எஸ் ஓவனிடம் இதனை தெரிவித்துள்ளார். இச்செய்தியை ஓவன் கடந்த 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.

‘சேவா’வில் அதிகமான ஆட்களை உறுப்பினர்களாக சேர்த்து அவர்கள் மூலமாக வகுப்புவாத சித்தாந்தத்தை பரப்ப மோடி தலைமையிலான குஜராத் அரசு முயன்றது. இதற்கு ஒப்புக் கொள்ளாததால் குஜராத் அரசின் பகையை சம்பாதித்துள்ளதாக நானாவதி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.மானியங்களை நிறுத்திவைத்து ‘சேவா’ வை தனது வழிக்கு கொண்டுவர குஜராத் அரசு முயல்கிறது. கட்ச் பகுதியில் ‘சேவா’வின் பணிகளை எதிரி மனப்பான்மையோடு காண்கிறது குஜராத் அரசு.

கட்ச் பகுதியில் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் மானியத்தை தராமல் முடக்கியுள்ளது குஜராத் அரசு. உறுப்பினர்கள் மத்தியில் சமூக வேறுபாடுகளில்லாமல் ஐக்கியம்தான் ‘சேவா’வின் வெற்றிக்கு காரணம். அரசு மானியத்தை முடக்கியதால் 12 ஆயிரம் பெண்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்க இயலவில்லை.மோடியின் அரசு 2002 இனப்படுகொலைக்கு பிறகு எல்லாம் மாமூலான நிலைமைக்கு திரும்பியுள்ளதாக கூறிவருகிறது.ஆனால், அரசியல் ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் என நானாவதி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் கூறியுள்ளார்.

வெளியே சமாதானமும், உள்ளே வகுப்புவாதத்தையும் வளர்க்கும் கொள்கையை குஜராத் அரசு தொடர்ந்து கடைப்பிடித்துவருவதாக ஓவன் வாஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.வருங்காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினரை தேசிய நீரோட்டத்திலிருந்து மேலும் அகற்றுவதற்கு முயன்றுவருகிறது.பொது வாழ்க்கையை வகுப்புவாத மயமாக்க குஜராத் அரசு முயல்கிறது. இது கூடுதல் மோதல்களுக்கும், இரத்தம் சிந்துவதற்கும் உதவும் என ஓவன் அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

யார் யாரெல்லாம் குஜராத் கலவரத்தில் குற்றவாளிகள்?அவர்களுடைய பங்கு என்ன? என்பது குறித்து வினவியபொழுது, ஏன் அமெரிக்கா கலவர விவகாரத்தில் கவலைக்கொள்கிறது? என குஜராத் முதன்மை செயலாளர் சுதீர் மங்காட் அமெரிக்க தூதரக அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்? நீங்கள் எப்பொழுதும் கலவரத்தை குறித்துதான் கவலைப்படுகின்றீர்கள். உலகில் வேறு எவ்வளவோ காரியங்களும் நடக்கின்றது என மங்காட் கூறியுள்ளார்.மனித உரிமையை கவனத்தில் கொண்டு அமெரிக்கா குஜராத் பிரச்சனையை தொடர்ந்து நுட்பமாக கண்காணிக்க வேண்டுமென கூறி ஓவன் வாஷிங்டனுக்கு அனுப்பிய தனது செய்தியை முடித்துள்ளார்.
thoothu

காட்டு ஆமணக்கு எண்ணெயில் மெக்சிகோ விமானம் ஓடியது!



மெக்சிகோ நாட்டில் ஏ320 ரக ஏர்-பஸ் விமானத்தை விமான எரிபொருளுடன் 30% காட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனை படைத்தார்கள்.

பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆய்வு நடக்கிறது.

ரயில் என்ஜின்களில் டீசலுடன் தாவர எண்ணெயைக் கலந்து ஓட்டலாம் என்பதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிரூபித்துள்ளன. இதற்காக ரயில்பாதை ஓரங்களில் காட்டு ஆமணக்குச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டன. என்ன காரணத்தாலோ இந்த ஆய்வும் சோதனைகளும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால் மெக்சிகோ நாட்டில் விமானத்தையே காட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்த எரிபொருளில் ஓட்டி சனிக்கிழமை சோதித்துப் பார்த்தார்கள். விமானம் வெற்றிகரமாக, எந்தவிதத் தொழில்நுட்பச் சிக்கலும் இன்றி பறந்தது.

மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏஞ்செல் அல்பினோ கார்சோ நகரம் வரை விமானத்தை ஓட்டினார்கள்.

விமான எரிபொருளைப் பயன்படுத்தினால் ஏற்படும் கரியுமிலவாயு வெளிப்பாடு இந்த கலப்பு எண்ணெயைப் பயன்படுத்தியபோது 60% குறைந்திருப்பதும் குறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. முதலில் பெட்ரோல், டீசலுக்கான தேவை 30% முதல் 60% வரை குறைந்தாலே சர்வதேசச் சந்தையில் அதன் விலை தாறுமாறாக உயர்வதைக் கட்டுப்படுத்தி விடலாம்.

அதே சமயம் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற காட்டு ஆமணக்கு எண்ணெய்க்கும் நல்ல பொருளாதாரப் பயன்பாடு கிடைக்கும். எளிதில் சாகுபடி செய்யக்கூடிய இதை இந்தியா போன்ற நாடுகளில் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் சாகுபடி செய்து எண்ணெய் வளத்தை உள்நாட்டில் பெருக்க முடியும்.

எனவே இந்த சோதனை முயற்சி எல்லா வகையிலும் பாராட்டத்தக்கதே ஆகும்.

உணவு உரிமை உயிரின் பரிசு!


இந்தியத் திருநாட்டின் உணவுக்கொள்கையில் மக்களின் உயிர்கள் இரண்டுவிதமாகப் பறிபோகின்றன. ஒருபக்கம் உணவை உற்பத்தி செய்பவன் கடனாளியாகிக் கந்துவட்டிக்குப் பலியாகித் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்கிறான். மற்றொரு பக்கத்தில் உணவு வாங்கப் பணமில்லாமல் பரம ஏழைகள் பட்டினியால் சாகின்றனர்.


உணவு உற்பத்தியாகும் இடங்களில் அரசுக் கொள்முதல் காரணமாக உணவை மலையெனக் குவித்துள்ளனர். யாருக்கு எங்கு தேவையோ அங்கு உணவு செல்வதில்லை. சத்தீஸ்கர், தமிழ்நாடு நீங்கலாக பொது விநியோகத்தில் உணவுத்தேங்கல் ஏற்பட்டுள்ளது.

எல்லா கிராமங்களிலும் ரேஷன் கடைகள் இல்லை. நகரப்பகுதிகளில் மட்டும் நிறைய உண்டு. மாத ரேஷன் வாங்க சில மாநிலங்களில் 10 முதல் 20 கி.மீ. வரை நடை பயில வேண்டும்.

ஒரேசமயத்தில் 20 கிலோ அல்லது 35 கிலோ அரிசியோ, கோதுமையோ வாங்கப் போதிய பணம் இல்லாததாலும் ரேஷன் கடைகளில் ஆஃப்டேக் அதாவது சரக்குகள் தீருவது இல்லையாம்.

தமிழ்நாட்டிலும் சத்தீஸ்கரிலும் ஒரு ரூபாய் அரிசித் திட்டம் உள்ளது. இதர மாநிலங்களில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயவிலையில்தான் ரேஷன் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற கூட்டுறவு விற்பனைச் சங்கம் பிரிட்டிஷ் ஆட்சியில் தொடங்கி நல்ல அடித்தளம் பெற்றிருந்தாலும் நடுவே நலிவுற்று நோயுற்றபோது ரேஷன் பொருள் விநியோகப் பொறுப்பைப் பெற்றுப் புத்துணர்வு கொண்டது.

தமிழ்நாட்டில் சுமார் 93% ரேஷன் பொருள்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்குச் சொந்தமான கடைகள் மூலம் விநியோகமாகின்றன. மீதி சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் கடைகள் மூலமும் விநியோகமாகின்றன.

தமிழ்நாட்டில் அனைத்துக் கிராமங்களிலும் ரேஷன் கடை உண்டு. அதிகபட்சம் 2 கி.மீ. தூரமே. அரிசி அரசியலால் ஆட்சியைக் கோட்டைவிட்ட காங்கிரஸ் ஆட்சிக்குப்பின், ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி வழங்குவதாக வாக்களித்த அறிஞர் அண்ணா வாக்குறுதியை ஏற்று தி.மு.க. பதவிக்கு வந்த காலம் முதலே அரிசி விஷயத்தில் உஷார்.

தி.மு.க. என்றாலும் அ.தி.மு.க. என்றாலும் போட்டி போட்டுக் கொண்டு ரேஷன் கடை நியாயவிலையைவிடக் குறைவாகக் குறைத்துக் குறைத்து இன்று கிலோ ஒரு ரூபாயானது.

அடுத்தகட்டமாக, இன்று 2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரிசி இலவசமாகிவிட்டது. மாநில அரசுக்கு இதனால் ஏற்படும் இழப்பு 4,000 கோடி ரூபாய். இந்த இழப்பை ஈடுசெய்யவே டாஸ்மாக் அதாவது ""தேசிய உடைமையாக்கப்பட்ட மதுக்கடை வியாபாரம்'' கைகொடுப்பது மட்டுமல்ல; டி.வி. பெட்டிகளையும் மாநில அரசால் வழங்க முடிந்தது.

கேபிள் கட்டண வசூலையும் பெருக்கிக் கொள்ள முடிந்தது. எப்படியெனில் டாஸ்மாக் மூலம் கணக்கில் வந்த நிகர லாபம் 12,000 கோடி ரூபாய்கள். கிலோ 1 ரூபாய்க்கு அரிசியுடன் டி.வி. யுடன் பல இலவசங்களை அள்ளிவிட்டுப் பெருமையுற்றாலும்கூட, மதுவிலக்கால் உயர்ந்த மகாத்மாகாந்தியின் "ஆன்மா இதை மன்னிக்குமா? ஏழை மக்களைக் குடிக்க வைத்துக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இலவசங்களை வழங்குவது அரசியல் தருமம் ஆகாது.

ரசாயன உரத்தால் விஷமான உணவுடன் உடலை விஷமாக்கும் டாஸ்மாக் சாராயமும் சேர்ந்து வயிற்றை நிரப்பும்போது ஈரல் நோய், இதய நோய், வயிற்றுப்புண், கட்டி, புற்றுநோய், வாத நோய், பித்த நோய் என்று தமிழர்களை நோயாளிகளாக மாற்றுவதுதான் உணவு உரிமைச்சட்டம் என்று ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டால் அந்த விதியை யார் மாற்ற முடியும்? ஆகவே, இதர மாநிலங்களுக்கு சத்தீஸ்கர் முன்மாதிரியே நன்று.

பழங்குடிகள் நிரம்பிய மாநிலம் சத்தீஸ்கர். மாவோயிஸ்டுகளின் கூடாரமும்கூட. உணவு விநியோகம் ஊழல் நிரம்பியிருந்தது. அரிசி உற்பத்தியில் உபரி மாநிலம். 1967-ல் தமிழ்நாட்டில் சி.என். அண்ணாதுரை செய்ததை பாரதிய ஜனதா தலைவர் ராமண் சிங் செய்தார். மக்களுக்கு ஊழலற்ற உணவு விநியோகத்தையும் மலிவு விலையில் அரிசியும் தர வாக்களித்தபடி 2004-ல் இவர் பதவிக்கு வந்தார். வந்தபின்னர் பொதுவிநியோக அவசரச்சட்டம் ஒன்றைப் பிறப்பித்துத் தனியார் ரேஷன் கடைகளையும், போலி ரேஷன் கடைகளையும் ஒழித்தார்.

ரேஷன் கடைகளைக் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், பஞ்சாயத்து சபை, மகளிர் சுயஉதவிக் குழு அமைப்புகளுக்கு வழங்கினார். ரேஷன் கடை அமைக்க வங்கிக்கடன் மானியங்கள் வழங்கப்பட்டன. ஏறத்தாழ 10,000 ரேஷன் கடைகளும் 1,500 கொள்முதல் நிலையங்களும் உருப்பெற்றன.

சத்தீஸ்கர் உணவு விநியோகத்தின் சிறப்பு எதுவெனில் அலோக் சுக்லாவின் ஆக்கப்பூர்வமான யோசனைகளுக்கு ராமண்சிங் வழங்கிய நல்லாதரவு. 2007-08-ல் உணவுச் செயலராகப் பணியாற்றிய சுக்லா ஐ.ஏ.எஸ். தலைசிறந்த பொது நிர்வாகி என்ற பிரதமர் விருதைப் பெற்றார். இவர் வழங்கியுள்ள உணவு நிர்வாகத்தில் ஒரு மூட்டை அரிசிகூட வீணாகாத திட்டத்தை அமல் செய்தார். ஆண்டுக்கு 44 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து அதில் 24 லட்சம் டன்கள் மையத் தொகுப்புக்கு வழங்கியதுபோக, நீண்டகாலம் நெல்லாக வைக்காமல் கொள்முதல் செய்த 4 மாதங்களுக்குள் அரவை செய்து பக்குவம் செய்து ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுவதுடன் - திருட்டுப்போகவோ, ஏமாற்றவோ, வெளி அங்காடிக்குக் கடத்தவோ வழியில்லாமல் கம்ப்யூட்டர் கண்காணிப்பும் உண்டு. திருட்டைக் கம்ப்யூட்டர் காட்டிக் கொடுத்துவிடுமாம்!

டாஸ்மாக் விற்பனையில்லாமல் நல்வழியில் மாநில மானியம் 1,287 கோடி ரூபாயுடன் மத்திய அரசு மானியம் 2,000 கோடி ரூபாய் கொண்டு உணவு விநியோகம் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் சுமார் 50 சதவீத மக்களுக்கு வழங்கி, மாவோயிஸ்டுக் கிளர்ச்சிகளையும் அந்த மாநில அரசு சமாளித்துவிட்டது.

உலகத்தில் வறுமையின் காரணமாக யாரையும் பட்டினியால் சாகவிடக்கூடாது என்றும், குறைந்தபட்சம் 1,700 கலோரி உணவாவது கிடைக்க வேண்டும் என்றும் ஐ.நா. உணவு - விவசாய நிறுவனம் வழங்கியுள்ள உத்தரவைத் தொடர்ந்து வளரும் நாடுகள் எல்லாம் ஏழைகளின் உணவு உரிமை மசோதாவை அதாவது "ஃபுட் செக்யூரிட்டி மசோதா'வைச் சட்டமாக்கி வருகின்றன.

குறிப்பாக, பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் கொடிய வறுமை நிலவி வருகிறது. ஐ.நா. உணவு நிதியும் கணிசமாக வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் வறுமைக்கோட்டை அளவிடுவதில் நிறைய முரண்பாடுகள் இருப்பினும், தமிழ்நாடு, சத்தீஸ்கர் மாநிலங்களில் பொது விநியோகத்தில் தாராள மனப்பான்மை உள்ளது. வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கும் அரிசி உண்டு.

டெண்டுல்கர் கமிட்டி ஐ.நா. உணவு - விவசாய நிறுவன அளவுகோலை மையமாக வைத்து கிராமப்பகுதிகளில் 41 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக முடிவு செய்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் என்.சி. சக்சேனாவின் முடிவு 50% ஆகும். திட்டக்கமிஷன் சர்வேயின்படி இது 28.3%.

ஏழ்மை பற்றிய புள்ளிவிவரம் பொதுவாகவே மிகைப்படுத்தப்பட்டுப் பேசுவதாகவும் கருத்து உண்டு. அரசிடமிருந்து எதுவும் உதவி கிட்டும் என்று மக்கள் பொதுவாக வருமானத்தைக் குறைத்துக் கூறலாம். என்னவாயினும் சரி, வறுமையில் உழன்று வாங்கும் சக்தி இல்லாத இம்மக்கள் பட்டினியில் மடிந்துவிடக் கூடாது என்றுதான் இந்திய நாடாளுமன்றத்தில் ஏழை உயிர்களுக்குப் பரிசாக உணவு உரிமை மசோதா சட்டமாக்கப்படவுள்ள சூழ்நிலையில், பொது விநியோகத்தை எட்ட முடியாத இடத்தில் உள்ளவர்களுக்கு எப்படி உணவுதானியம் கிடைக்கச் செய்வது என்றுதான் யோசிக்க வேண்டும்.

மாறாக, 2011 பட்ஜெட்டில் உணவு மானியத்தைப் பணமாக வழங்கப் போவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளதைக் கவனித்தால் உணவு விநியோகத்தை, அதாவது ஏழைகளுக்கு ரேஷனில் அரிசி, கோதுமை வழங்கும் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது. குடும்பத்தலைவரிடம் வழங்கப்படும் பணத்தை அவர் உணவை வாங்கச் செலவழிப்பாரா? "குவார்ட்டர்' வாங்கச் செலவழிப்பாரா?

தவிரவும் உண்மையான ஏழையை அடையாளப்படுத்துவதிலும் சிக்கல் உண்டு. ஏழைகளைச் சென்றடைய வேண்டிய பணம் நடுவில் இடைத்தரகர்களைச் சென்றடையலாம்.

இப்பொழுதும்கூட வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளின் அடையாள அட்டைகளை வழங்குவதில் முறைகேடுகள் உண்டு. அதற்கும் ஏழைகள் லஞ்சம் கொடுத்துப் பெறவேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல; எல்லா மாநிலங்களிலும் உள்ளது.

உணவைக் கொள்முதல் செய்வதிலிருந்து பின்னர் பக்குவப்படுத்தி அது நுகர்வோரிடம் சென்றடையும்வரை பல கட்டங்களில் பலவிதமான ஊழல்கள் உண்டு. இந்த ஊழல் கூட்டணியில் உணவுக் கார்ப்பரேஷன், மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன், ரேஷன் கடைகள் இணைந்து அந்த நாள் முதல் இந்த நாள் வரை சாதித்தவை 2ஜி ஸ்பெக்ட்ரம்போல் ஒன்றுக்குப்பின் பல பூஜ்ஜியங்கள் போட்ட பல கோடி ஊழல்கள் என்று அண்மையில் ஷேட்காரி சங்கடன் விவசாயிகள் சங்கத் தலைவரும் எம்.பி.யுமான சரத் ஜோஷி அப்பட்டமாகக் கூறுகிறார்.

ஒருபக்கம் மலைபோல் உணவுக்குவியல். மற்றொருபக்கம், வாங்கும் சக்தியற்று ஆதிவாசிகளாகவும், பழங்குடிகளாகவும் வாழ்ந்துவரும் தரித்திர நாராயணர்களின் பட்டினிச்சாவுகள்.

உணவுக் கொள்முதலில் பிரச்னைகள் இல்லை. கொள்முதல் செய்த உணவு நிஜமான ஏழைகளை அடையாததுதான் விசுவரூபம் எடுத்து வருகிறது. இதில் தமிழ்நாடும் சத்தீஸ்கரும் விதிவிலக்கு.

வாங்கும் சக்தியற்ற பல கோடி கடைக்கோடி மக்களைப் பட்டினியால் வாடிச் செத்துவிடாமல் பாதுகாக்கும் நல்லெண்ணத்தில் உணவு பெறும் உரிமைச்சட்டம் இயற்றப்பட்டு உயிரின் பரிசாக அன்னமிடுவதைப்போல் நல்ல புண்ணியம் வேறு ஏதும் உண்டோ?
dinamani

வெள்ளி

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கடற்கரையில் கடந்த சில மாதங்களாக நூதன சம்பவம்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கடற்கரையில் கடந்த சில மாதங்களாக நூதன சம்பவம் ஒன்று நடந்து வருகிறது. கடற்கரை, மீன்பிடி துறைமுகம் என எங்கு பார்த்தாலும், லட்சக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்குகின்றன. தினம்,தினம் ஒதுங்கும் இந்த மீன்களை அப்புறப்படுத்துவதற்குள்,  உள்ளாட்ச்சி நிர்வாகத்திற்கு போதும், போதுமெனவிடுகின்றது. கடலி்ல் ஒரு அடி ஆழத்திற்கு, லட்சக்கணக்கில் பல வகையான குட்டி மீன்கள் செத்து ஒதுங்குகின்றன.ஏன் இவ்வாறு மீன்கள் செத்து ஒதுங்குகின்றன என ,யாருக்கும் காரணம் புரியவில்லை. தண்ணீரில் விஷம் கலந்து இருந்தால், மற்ற பெரிய மீன்களும் செத்து ஒதுங்க வேண்டும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. குறிபிட்ட சில வகை மீன்கள் மட்டுமே செத்து ஒதுங்குகின்றன. கடலில் எண்ணை கசிவு எதுவும் ஏற்படவில்லை. ஏதோ ஒரு காரணத்தால், கடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, இவ்வாறு மீன்கள் செத்து இருக்கலாம் என, மீன் வள நிபுணர்கள் கருதுகின்றனர் எனினும், செத்து ஒதுங்கும் மீன்களால், ஊர் முழுவதும் தூர்நாற்றம் வீசுகிறது. ஆகி

கலைஞர் செய்தியின் 2011 தேர்தல் களம் : மாநிலத் தலைவரின் அதிரடி நேர்கானல் (வீடியோ)


மாத கால பிரச்சாரகர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீ ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த ஒருமாத பிரச்சாரகர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று (31.03.2011)  மதியத்துடன் நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்…

நேற்ற நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சியின் ஆரம்பமாக பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஒருமாத காலம் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது பகுதியில் சென்று எந்த அளவிற்கு வீரியமாக பிரச்சாரக் களத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதை வரக்கூடிய மூன்று மாதங்களில் கவனித்து அந்தந்த பிரச்சாரகர்கள் இருக்கும் மாவட்டத்தின் நிர்வாகிகள் அவர்களுக்கு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பேச்சாளர்கள் என்ற அடையாள அட்டையை மாநிலநிர்வாகம் வழங்கும் என்று அறிவிப்பு செய்தார்.
அதைத்தொடர்ந்து மாநிலத்தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பிரச்சாரகர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை பிரச்சாரகர்களுக்கு அறிவுரையாக வழங்கினார்.
பொதுப்படையாக நாம் அனைவரும் தவறுகளிலிருந்து தவிர்ந்து வாழவேண்டும் என்று இருந்தபோதிலும், பிரச்சாரகர்களாக இருக்கக்கூடிய நாம், நமது இந்த தூய ஏகத்துவ பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான பாவங்களிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து வாழவேண்டும் எனவும், பெண்கள் தொடர்பான விஷயங்களிலும், பொருளாதரம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் நமது ஜமாஅத்தின் இன்னபிற பிரச்சாரகர்கள் எந்த அளவிற்கு கவனமாகவும், பேணுதலாகவும் இருக்கின்றார்களோ அதைப்போல நீங்களும் மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும், பிரச்சாரகர்கள் நேரந் தவறாமையை கடைபிடிப்பது அழைப்பு பணியின் முக்கிய அம்சமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு மத்தியில் காலத்தின் கட்டாயம் கருதி மிகுந்த பொருட்செலவோடு நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புக்கு தங்களது பங்களிப்பை பொருளாதார ரீதியாக பெருமளவு செய்த வெளிநாடு வாழ் மண்டலங்களுக்கும், மாவட்ட வாரியாக தங்களது பங்களிப்பை செய்த மாவட்ட நிர்வாகிகளுக்கும், கிளை நிர்வாகிகளுக்கும், தனிநபராக இருந்து பொருளாதார பங்களிப்பை செய்தவர்களுக்கும், நல்ல முறையில் பாடங்களை நடத்திய ஆசிரியர்களுக்கும், முழு ஒத்துழைப்பு நல்கிய மாநில நிர்வாகிகளுக்கும், தங்களது பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்லமுறையில் வழங்கிய அனைவருக்கும் நன்றிகூறி முடிக்க, ஒரு மாத பிரச்சாரகர்களுக்கான பயிற்சி வகுப்பு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!