எம்பிஏ படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்துமே வேலைவாய்ப்புகளின் தன்மைக்கேற்ப எம்பிஏ படிப்புகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்தி வருகின்றன. மனித வளத்துறையில் எம்பிஏ படிப்புகளை சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. நெல்லை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ (மனிதவளம்) படிப்பு உள்ளது.
இத்துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்பை டெல்லியில் உள்ள இன்டர்நேஷனல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் (ஐ.எம்.ஐ.,) கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. மனிதவளம் சார்ந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு பன்னாட்டு வணிக நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்களில், தொழிற்சாலைகளில் நல்ல ஊதியத்தில் அதிகாரி நிலையில் பணிவாய்ப்புகள் கிடைக்கின்றன. ஐஎம்ஐ கல்வி நிறுவனத்தில் தற்போது நிர்வாகம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையில் 2 வருட முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு 2011-12ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இப்படிப்பில் சேர ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கேட்/ஜிமேட் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். கல்விக்கட்டணம், மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளிட்ட பிற விவரங்களை www.imi.edu என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதே இணையதளத்தில் விண்ணப்பங்களையும் கையேடுகளையும் டவுன்லோடு செய்து கொள்ள லாம். இப்படிப்பில் சேர, வரும் நவ.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.