தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

தடை போட்ட காவல்துறை! தகர்த்தெறிந்த டிஎன்டிஜே!

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக வரதட்சணை என்னும் சமூகக் கொடுமையை எதிர்த்து, “மாபெரும் வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணி” மற்றும் பொதுக்கூட்டம் நடத்த கோவை மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். வரதட்சணையின் கேடுகளை விளக்கி கோவையில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக ஆண்களும், பெண்களும் ஊர்வலமாகச் சென்று, வீடுவீடாக தெருக்கள் தோறும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தும், தட்டி பேனர்களைக் கையில் ஏந்தியும், முக்கிய தெருக்களில் 6 இடங்களில் தெருமுனைக் கூட்டத்துடனும், பேரணியின் இறுதியில் மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றும், மாபெரும் வரதட்சணை விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தையும் நடத்த நமது நிர்வாகிகள் முடிவு செய்து முறையாக காவல்துறை அனுமதி கேட்டிருந்த நிலையில், பல்வேறுகட்ட இழுத்தடிப்புகளுக்கு பிறகு நிகழ்ச்சி நடைபெற இருந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று அனுமதி மறுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெகுண்டெழுந்த டிஎன்டிஜே :
வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணிக்கும், பொதுக்கூட்டத்திற்கும் தடை போட்டுள்ளோம் என்றால் நமது மக்கள் தலையாட்டிக் கொண்டு சும்மா சென்றுவிடுவார்களா என்ன? தடை என்ற வார்த்தையைக் கேட்டாலே, அததகைய தடைகளை வல்ல இறைவனின் கிருபையால் தகர்தெறிந்து சாதனை படைக்கும் டிஎன்டிஜே சகோதரர்கள், காவல்துறை போட்டுள்ள இந்த்த் தடையைத் தகர்த்தெறிந்து பேரணியாகச் சென்று சமுதாய விழிப்புணர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என முடிவெடுத்து களத்தில் குதித்தனர்.
காவல்துறை குவிப்பு :
இது போன்ற சமூகத்தீமைகளை எதிர்த்து களம் காணும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஆதரவாக காவல்துறையும் களத்தில் நின்று இத்தகைய நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இதை ஊக்குவிக்க வேண்டிய காவல்துறையே, இத்தகைய ஒரு நிகழ்ச்சிக்கு தடைபோட்டது பெரிய ஆச்சரியமான விஷயமாக உள்ளது. டிஎன்டிஜே சகோதரர்கள் தடையை மீறி பேரணி செல்ல இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மர்கஸைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட போலீஸ் படையைக் குவித்தனர்
காவல்துறையின் தடையையும் மீறி ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கோவையின் முக்கிய பகுதியாக உள்ள மதீனா நகர், வள்ளல் நகர், பிலால் நகர், பாத்திமா நகர், ராயல் நகர், சாரமேடு, பொன்விழா நகர், இலாஹி நகர், பிஸ்மி நகர், அல் அமீன் காலனி, ஆகிய பகுதியில் பேரணியாக வந்து உக்கடம் லாரி பேட்டை பகுதியில் வந்து குழுமினர்.
பொதுச்செயலாளரின் எழுச்சி உரை :
ஆயிரக்கணக்கணக்கான மக்கள் காவல்துறையினர் போட்ட தடையையும் மீறி ஆண்களும், பெண்களுமாக அதுவும் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது இந்த சமுதாயம் மறுமை வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளது என்பதை பறைசாற்றுவதாக அமைந்தது.
நமது மக்கள் உக்கடம் லாரிப்பேட்டைப் பகுதியில் குழுமியவுடன் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார். இத்தகைய சமூகத்தீமைகளுக்கு எதிராக களம் காணுபவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டிய காவல்துறை அதற்குத் தடைபோடுவது வெட்கக்கேடு என்றும், எத்தகைய தடைகளைப் போட்டாலும் அதைத் தகர்த்தெறிய தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தனது உரையில் வரதட்சணை எனும் சமூகத்தீமையின் அவலங்களையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் அவர் பட்டியலிட்டார். அவரது கண்டன உரைக்குப் பிறகு கைதுப்படலம் ஆரம்பமானது.
கைது செய்ய வாகனங்கள் போதாமல் காவல்துறையினர் திணறல் :
காவல்துறையினர் தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனங்கள் அனைத்திலும் நமது சகோதர, சகோதரிகளைக் கைது செய்து மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். நமது சகோதரர்களைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் கொண்டு வந்த வாகனங்கள் போதாத காரணத்தினால், கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் போல் தடைகளைத் தகர்த்தெறிந்து பேரணி சென்ற நமது சகோதரர்களைக் கைது செய்ய முடியாமல் திக்குமுக்காடிய காவல்துறையினர் கூடுதல் வாகனங்களை வரவழைத்து பிறகு கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
தடையை மீறி நீங்கள் பேரணி நடத்தியுள்ளதால் உங்கள் அனைவர் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டு 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப் போகின்றோம் என்று போலீஸார் பயம் காட்டியுள்ளனர். அதற்குப் பதிலடியாக, “எங்கள் அனைவர் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டு ஜெயிலில் தள்ளுங்கள்; அதற்கெல்லாம் இந்த சமுதாயம் பயப்படாது; மேலும், அவ்வாறு எஃப்.ஐ.ஆர் போட்டால் பெயிலுக்கு கையெழுத்துப்போட வரும் போதெல்லாம் அதுவும் பேரணியாகத்தான் இருக்கும்” என்று காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தெரிவிக்க தக்பீர் முழக்கம் விண்ணைத் தொட்டது.
அதைத் தொடர்ந்து பின்வாங்கிய காவல்துறை ஒரு பேரணிக்கு தடைபோட்டால் வாராவாரம் இவர்கள் பேரணி நடத்தினாலும் நடத்துவார்கள் போல என்று அஞ்சி நம் சகோதரர்கள் அனைவரையும் இரவு 9மணிக்கு விடுதலை செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
தடை போடக் காரணம் என்ன? :
இத்தகைய சமூக அவலத்தைத் துடைத்தெறியும் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப்பணிக்கு காவல்துறை ஏன் தடை போட வேண்டும் என நாம் ஆய்வு செய்ததில், சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களை சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள் தான் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்த பின்புலமாக இருந்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
வரதட்சணை ஒழிப்புப் பிரச்சாரம் வீரியமடைந்தால் தங்கள் ஜமாஅத்துக்கு வரும் வரதட்சணை பணத்திற்கான கமிஷன் கிடைக்காமல் போய் விடும் என்று பதறிவிட்டார்களோ என்னவோ! பெரும்பாலும், இவர்கள் நம்மை எதிர்ப்பதற்கு இவர்களது வருமானம் தடைபடுகின்றது என்பதுதான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
பெண்ணுரிமைக்கு எதிராக ஒரு பெண் அதிகாரி :
வரதட்சணை என்னும் இந்த சமூகக் கொடுமையால், பெண்கள்தான் பெருவாரியாக பாதிக்கப்படுகின்றனர். அதை பெண்களே உணர்ந்த பாடில்லை. இந்த வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணிக்கு தடைபோட்டது துணைஆணையாளராக உள்ள ஹேமா என்ற பெண் அதிகாரிதான் என்பது இன்னுமொரு துயரமான செய்தி