தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

தடையை தகர்த்தெறிந்த கோவை வாழ்வுரிமை போராட்டம்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப்ரவரி-14  அன்று வாழ்வுரிமை போராட்டம் நடத்த நெல்லையில் நடந்த மாநில பொதுக்குழுவில் தீர்மானிக்கபட்டது. இதையடுத்து கோவையில் பிரம்மாண்ட அளவில் போராட்டம் நடத்த மாவட்ட நிர்வாகிகள் ஆயத்தமாயினர். முஸ்லிம்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி நடத்தப்படுகின்ற இந்த வாழ்வுரிமை போராட்டத்திற்கு முறைப்படி காவல்துறைக்கு அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடிதம் அளிக்கப்பட்டது.
மக்கள் பிரச்சினைகளுக்கு எளிதில் செவி சாய்க்காத காவல்துறை, வாழ்வுரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் மக்களாகிய நமக்கு உடனடியாக போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவித்தனர். காவல்துறையின் அனுமதி மறுப்பு மூலம் போராட்டத்திற்கு மக்களை அழைப்பதற்காக விளம்பரங்கள் எதுவும் செய்ய இயலாத இக்கட்டான நிலைக்கு மாவட்ட நிர்வாகிகள் தள்ளப்பட்டனர்.


எனினும் பிப்ரவரி-14 அன்று தடையை மீறி வாழ்வுரிமை போராட்டத்தை நடத்த வேண்டும் என தீர்மானிக்கபட்டது. இதனடிப்படையில் பிப்ரவரி-14 அன்று செஞ்சுலுவை சங்கம் முன்பு மாலை 5 மணியளவில் தடையை மீறி வாழ்வுரிமை போராட்டம் என அறிவிக்கப்பட்டது. சரியாக மாலை 5:30 மணியளவில் அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்துடன் போராட்டம் ஆரம்பித்தது. மக்கள் வெள்ளம் நாளப்புறத்திலிருந்தும் வந்து கொண்டு இருந்தது. கமிஷனர் அலுவலகம் அருகிலிருந்து ஒரு கூட்டம் பேரணியாகவும்,   DSP அலுவலக பஸ் நிறுத்ததிலிருந்து மக்கள் வெள்ளம், நீதிமன்ற சாலையிலிருந்து மக்கள் வெள்ளம் என திரும்பிய திசையெல்லாம் மக்கள் ஆர்பரித்து கோஷங்களுடன் போராட்ட களத்திற்கு வந்தடைந்தனர். இது போன்று அனைத்து திசைகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் ஆர்பரித்ததும் காவல்துறையினர் செய்வதறியாது வெளவெளத்து   போயினர். மீடியா நண்பர்களும் எங்கிருந்து வரும் மக்களை படமெடுப்பது என்று சற்று குழம்பித்தான் போயினர். புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே…

இடஒதுக்கீடு மட்டுமே எங்கள் கோரிக்கை அதை விடுத்து எங்களுக்கு எதுவுமே வேண்டாம் என மக்கள் கோஷங்கள் மூலம் தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தினர். மாநில செயலாளர் முஹம்மத் யூசுப் அவர்களின் கண்டன உரை முத்தாய்பாய் அமைந்தது. கண்டன உரைக்கு பிறகு கைது படலம் ஆரம்பமானது. முதலில் காவல்துறை கொண்டு வந்திருந்த வாகனங்களில் பெண்கள் மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறிது நேரத்திலேயே காவல்துறை வாகனம் போதவில்லை. 1500 மக்கள் வருவார்கள் என்று கூறினீர்கள். ஆனால் நாங்கள் 2000 மக்களை ஏற்றி செல்வதற்கு தயாராக வாகனங்களை கொண்டு வந்திருந்தோம். 3500கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று சொல்லி இருந்தால் அதற்குண்டான ஏற்பாட்டை செய்திருப்போம் என காவல்துறை அதிகாரிகள் கூறினர். இத்தனை மக்கள் வருவார்கள் என எங்களுக்கே தெரியாது என மாவட்ட நிர்வாகிகள் கூறியது அல்லாஹ்வின் வல்லமையை காட்டியது.  வாகனங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தால், கோவை காந்திபுரம் செல்லக்கூடிய பயணிகள் பேருந்துகளை காவல்துறையினர் கைது செய்து மக்களை மண்டபம் கொண்டு செல்ல உபயோகித்தனர்.
கூடுதல் வாகனங்கள் வர தாமதம் ஆனதாலும், மக்ரிப் தொழுகைக்கான நேரம் வந்ததால் போராட்ட காலத்திலேயே மக்கள் தொழுகைக்கு தயாராகினர். இது பெருநாள் திடல் தொழுகையை மக்களுக்கு நினைவூட்டியது. புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே…
கைது செய்யபட்டு மண்டபத்தில் இருந்த 3500கும் அதிகமான மக்கள் இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
முஸ்லிம்களின் போராட்டத்திற்கு தடைவிதித்து அதை ஒடுக்கி விடலாம், நசுக்கி விடலாம், என்று கனவு கண்ட கோவை காவல்துறைக்கு கிடைத்த இரண்டாவது சாட்டையடி இந்த தடையை மீறிய வாழ்வுரிமை போராட்டம். ஏற்கனவே கடந்த பிப்ரவரி-5 அன்று கோவை மாவட்ட மாணவரணியின் வரதட்சணை  ஒழிப்பு பேரணிக்கு காவல்துறை தடைவிதித்தது. வரதட்சணை  ஒழிப்பு பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் தடையை மீறி கலந்து கொண்டனர். வல்ல ரஹ்மானின் வல்லமையால் தடைகளை தகர்த்தெறிந்து வென்று காட்டினோம். புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே…

கூடுதல் புகைப்படங்கள் & போராட்டக்கள வீடியோ காட்சிகள் இன்ஷா அல்லாஹ், நாளை வெளியிடப்படும்