முன்னோர்கள் சிலரால் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதைத் தவிர குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட ஆராயவில்லை.
‘பராஅத் இரவு’ ‘ஷபே பராஅத்’ என பல பெயர்களில் கொண்டாடப்பட்டு வரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்புமிக்க இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டுவருகின்றது. ‘லைலத்துல் கத்ரு’ ‘லைலத்துல் ஜும்ஆ’ போன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் ‘லைலத்துல் பராஅத்’ என்னும் சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை.
பராஅத் இரவு
பராஅத் இரவு குர்ஆன் அருளப்பட்ட இரவு என்றும் ‘நிச்சயமாக நாம் பாக்கியம் மிக்க இரவில் இந்த குர்ஆனை அருளினோம்’ (44:03) என்று வரும் குர்ஆன் வசனம் இந்த பராஅத் இரவையே குறிக்கின்றது என்றும் மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இது தவறாகும். ‘திருக்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது’ என்று திருக்குர்ஆன் 2:185ம் வசனத்தில் திடடவட்டமாகக் கூறுகின்றது.
ஆக, பாக்கியம் மிக்க இரவு ரமழான் மாதத்தில் தான் இருக்கின்றது. அது ரமழானின் எந்த இரவு என்பதை நாம் தேடிப்பார்க்கும் போது ‘லைலத்துல் கத்ர் இரவில்’ நாம் திருக்குர்ஆனை அருளினோம் (97:01)என்று அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகிறான். எனவே, ‘பாக்கியம் மிக்க இரவு’ என்பதும் ‘லைலத்துல் கத்ர் இரவு’என்பதும் ரமழான் மாதத்தில் வருகின்ற ஒரே இரவு தான் என்பது தெளிவாகின்றது.
குர்ஆன் இரண்டு இரவுகளில் அருளப்பட்டது. முதல் இரவில் பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு அருளப்பட்டது. அங்கிருந்து சிறிது சிறிதாக நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது மற்றொரு இரவு எனக் கூறுகின்றனர். இதுவும் ஏற்கத்தக்கதல்ல.
பராஅத் நோன்பு
ரமழானை வரவேற்கும் விதத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத் தொடக்கத்தில் இருந்தே நோன்பு நோற்றுள்ளார்கள். மற்ற மாதங்களை விட அதிகமாக ஷஃபானில்தான் நோன்பு வைத்துள்ளார்கள். 15 நாட்களும் நோன்பு வைத்துள்ளார்கள். மற்றபடி, ஷஃபானின் பதினைந்தாவது இரவு வந்தால் நோன்பு வையுங்கள் என அண்ணலார் கூறியதாக உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீன மானவை. ஷஃபான் 15க்குப் பிறகு நோன்பே வைக்கக்கூடாது என்றே ஹதீஸ்கள் தடை செய்கின்றன.
ஷஃபான் மாதத்தின் பாதியை அடைந்து விட்டால் நோன்பு வைக்காதீர்கள்! (அறி விப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: அஹ்மத், அபூ தாவூது, நஸயீ, திர்மிதி, இப்னு மாஜா). வழமையாக நோன்பு வைப்போர் மட்டும் வைத்துக்கொள்ளலாம்.
சிறப்பு வணக்கங்கள் – மூன்று யாஸீன்கள்
இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப்பின் ‘மூன்று சூயாசீன்’ ஓதி துன்பம் துயரங்கள் நீங்கி பாவங்கள் மன்னிக்கப்படவும் (1) நீண்ட ஆயுளைப் பெறவும் (2) நிலையான செல்வத்தைப் பெறவும் (3) துஆச்செய்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்த இரவில்தான் ‘தக்தீர்’ என்னும் விதி நிர்ணயிக்கப்படுகின்றது என்னும் நம்பிக்கைதான் மூன்று யாசீன் ஓதி துஆசெய்யும் வழக்கத்திற்கு காரணமாகும்.
கப்று ஸியாரத்
இவ்வளவு நாட்களும் நினைவு படுத்த முடியாது போனதற்காக இறந்த போன பெற் றோர்கள்,உறவினர்கள், அவ்லியாக்கள் சமாதிகளுக்குச் சென்று விசேச ஸியா ரத்,பரார்த்தனைகள் நடை பெறும்.
சிறப்புத் தொழுகைகள்
இஷா தொழுகைக்கு முன் இரண்டிரண்டு ரக்அதகளாக நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 25 முறைகள் ஓதவேண்டும்.
இஷா தொழுகைக்குப்பின் இரண்டிரண்டு ரக்அத்களாக 12 ரக்அத்கள் தொழ வேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 5 முறைகள் ஓதவேண்டும்.
‘அலியே! ஷஃபானின் 15-வது இரவில் நூறு ரக்அத்துகள் தொழுவதை மறந்து விடாதே! அவற்றில் குல்ஹுவல்லாஹ் நூறு தடவைகள் ஓதுவதை மறந்து விடாதே!’ போன்ற பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளன என இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் தமது நக்லுல் மன்கூள் நூலில் குறிப்படுகிறார்கள்.
தஸ்பீஹ் தொழுகை. முன்னூறு தஸ்பீஹ்கள் ஓதித் தொழும் இந்தத் தொழுகைக்கும் ஆதாரபூர்வமான எந்த ஹதீஸும் கிடையாது.
இவற்றையெல்லாம் தெடர்ந்து நடத்திவிட்டு இறுதியாக நோன்பையும் நோற்பார்கள்.
நன்மைகள் தானே
தொழுவது யாசீன் ஓதுவது துஆ செய்வது போன்றவை நன்மைகள்தானே, அவற்றைச் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று சொல்வது எப்படி? என நம்மில் பெரும் பான்மையினர் பலரும் நினைக்கலாம்.
‘எவர் நம்மால் கட்டளையிடப்படாத அமல்களை செய்கிறாரோ, அவை அல்லாஹ் விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவில் இன்றைக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது உண்மையிலேயே மார்க்கமாக இருந்திருப்பின் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்திருப்பார்கள். அவ்வாறு அவர்களால் காட்டித்தரப்படாத ஒரு வழிமுறையை முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விஷேச இரவு என்று கருதிக் கொண்டு செய்துவரக் கூடாது. இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். குற்றமாகவும் ஆகிவிடும்.
ஹதீஸ்களின் நிலை
(1) ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில் ‘அல்லாஹ் பராஅத் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடு களுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று நபி அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கின்ற திர்மிதீ இமாம் அவர்களே, இமாம் புகாரி (ரஹ்) அவர் கள் இது பலவீனமானது எனக்கூறியதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
(2) இப்னு மாஜாவில் ‘ஷஃபானில் பதினைந்தாம் இரவில் பகல் பொழுதில் நோன்பு வையுங்கள். இரவில் நின்று வணங்குங்கள்’ என நபி அவர்கள் கூறியதாக அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு மாஜாவில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸும் சரி யானது அல்ல.
(3) ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு என்று நபி அவர்கள் கூறினார்கள். இதனையும் முஹத்தி ஸீன்கள் ஏற்கவில்லை. இதேபோல் மற்ற ஹதீஸ்களையும் நிராகரிக்கிறார்கள்.
நன்மையான நோன்புகள்
வாரந்தோறும் திங்கள், வியாழன் நாட்கள், மாதந்தோறும் பிறை 13,14,15 நாட்கள், ஆஷூரா நாள், ஷவ்வால் ஆறு நோன்புகள் என பல நாட்கள் நோன்பு வைக்க சிறந்த நாட்கள் என்றும் அவற்றுக்கு எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கும் என்றும் அண்ண லார் சொல்லியுள்ளார்கள். ஆனால், இந்நாட்களில் நோன்பு வைப்பதைப் பற்றி நினைத் துக்கூடப் பார்ப்பதில்லை. அதேசமயம், அண்ணலார் காட்டித்தராத ஷஃபான் 15 நோன் புக்கு பயங்கர முக்கியத்துவம் கொடுக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண் டும்.
பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?
ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி பதினைந்தாவது இரவில் தொழும் நூறு ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும் — இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது. இதே போன்ற கண்டனம் ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இறைவனும் இறைத்தூதரும் சொல்லிக்காண்பித்தபடி இஸ்லாமிய நன்னெறியைப் பின்பற்றி வாழ்கின்ற நற்பேற்றை உங்களுக்கும் எங்களுக்கும் வல்ல அல்லாஹ் அளிக்க வேண்டும் என்னும் பிரார்த்தனையோடு …
by umari