தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

கற்பிணிப் பெண்கள் நோன்பு பிடிப்பது பற்றிய விளக்கம்


கேள்வி : கற்பிணிப் பெண்கள் நோன்பு பிடிப்பது பற்றி சரியான விளக்கம் தருக.
- Haatim deen (srilanka)
பதில் கற்பிணிப் பெண்கள் ரமழான் காலத்தில் நோன்பு பிடிக்காமல் இருப்பதற்கு அல்லாஹ் சழுகை அளித்துள்ளான்.

கற்பிணியாக இருக்கும் பெண்கள் நோன்பு நோற்கும் போது அவர்களுக்கு உடலியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாலும், குழந்தைக்குறிய ஊட்டச் சத்துக்கள் குறைபாடடைவதற்கும் காரணமாக அமையும் என்பதினால் கற்பிணிப் பெண்கள் ரமழான் காலத்தில் நோன்பை விடுவதற்கு அல்லாஹ் அனுமதி கொடுத்துள்ளான்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)நூல்: நஸயீ 2276
ஒருவருக்கு ஒரு செயலில் இருந்து, விதிவிலக்குக் கொடுக்கப்பட்டு சழுகையாக அது ஆக்கப்பட்டால் அந்த சழுகையைத் தான் அவர் பயண்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிலும் கற்பிணிகளில் சிலர் நோன்பு காலத்தில் நோன்பு நோற்பதற்கு ஆசைப்பட்டு அல்லது மற்ற காலங்களில் அதனை மீட்டிக் கொள்ள விரும்பாமல் ரமழானிலேயே நோன்பு பிடிக்கிறார்கள் இது அவர்களை அவர்களே கஷ்டப்படுத்துவதற்கு சமனானதாகும்.

இப்படி செய்வதை பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தையைப் பெற்றெடுத்த பின் அவர்கள் அந்த நோன்பை கழாச் செய்து கொள்ள முடியும்.

கற்பிணிகள் நோன்பை கழாச் செய்ய தேவையில்லையா?

(இலங்கையில்) சிலர் கற்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் நோன்பை கழாச் செய்யத் தேவையில்லை என்று வாதிட்டு வருகிறார்கள்.

இவர்களின் இந்த வாதம் தவறானதாகும்.

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.
'பயணிகள் பாதியாகத் தொழுவதற்கு அல்லாஹ் சலுகையளித்துள்ளான். பயணிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் சலுகையளித்துள்ளான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல்கள்: அபூதாவூத் 2056, இப்னுமாஜா 1657
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் வழங்கப்பட்டுள்ள சலுகையானது பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் போன்றது தான் என்று இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

பயணிகளுக்கு நோன்பே கடமையில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனெனில் பயணிகளும், நோயாளிகளும் நோன்பை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

கர்ப்பிணிகளையும், பாலூட்டும் தாய்மார்களையும் பயணிகளுடன் இணைத்து இந்த ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் அவர்களும் நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு நாட்களுக்குள் கழாச் செய்ய வேண்டும்.

இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.
ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.நூல்: புகாரி 1950
ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.

அல்லாஹ்வே அறிந்தவன்.
பதில் : ரஸ்மின் MISc