ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரகணத்தின் போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கிரகணத்தின் போது கட்டாயம் பல மேட்டுக்குடி மக்கள் விரதம் இருக்கின்றனர்.
கொஞ்சம் நடுத்தர வர்க்கமும், கொஞ்சம் விபரம் அறிந்தவர்களும், கிரகணத்தின் போது கருவுற்ற பெண்களை, கிரகண நேரத்தில் வெளியே விட மாட்டார்கள்; யாரும் சாப்பிட மாட்டார்கள். முக்கியமாக, அனைத்துக் கோயில்களின் நடை சாத்தப்படுகிறது. கிரகணம் முடிந்த பின், கோயில்களை கழுவி விடுகின்றனர். மக்கள் குளித்த பின்னரே சாப்பிடுகின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெயிலில் வருந்தி பாடுபட்டு, உழைத்து உண்ணும், அடித்தட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது. அது ஒரு பக்கம் இருக்க, உலகில் வாழும் அனைவரும் இப்படித்தான் செய்கின்றனரா? அப்படித்தான் பழக்க வழக்கங்களை நாமும் கடைபிடிக்க வேண்டுமா? கிரகம் பிடிச்சவனே/வளே என்று திட்டுவது, இந்த கிரகணம் பிடிச்ச கிரகணத்தினால்தானா/ காரணத்தினால்தானா ?
"திருமலை திருப்பதி கோவில் ஜூன் 15 ல் மாலை 6 மணி முதல் ஜூன் 16 அதிகாலை 4.30 வரை மூடப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 15 ஆம் தேதி பகல் 12.53 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி கோவில் சுத்திகரிக்கப்பட உள்ளதால் மாலை 6 மணிக்கு கோவில் மூடப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். மேலும் ஜூன் 16 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் கோவிலில் நடைபெற உள்ள திருப்பாவாடை சேவை ரத்து செய்யப்பட உள்ளது." இந்த தகவல் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
எது கிரகணம்....?
கிரகணம் என்றால் என்ன? இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது, சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது அந்த வான் பொருள், நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப் படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.
2011 , ஜூன் முதல் தேதியிலிருந்து ஜூலை முதல் தேதிக்குள் (30 நாட்களுக்குள்) வானம் நமக்கு மூன்று அற்புதமான விருந்தினை படைக்கிறது..! ஆமாம். ஜூன் முதல் தேதி அன்று, பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்போது, ஜூன் 15 ம் நாள் 2011ம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் உருவாக உள்ளது. இந்த முழு சந்திர கிரகணத்தின் போது, முழு நிலா நாளில், நிலவு முழுமையாக நம் கண்களிருந்து மறைக்கப்பட்டு விடும். அது மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் மிகக் கருமையான சந்திரக் கிரகணம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு விருந்து..! அடுத்து ஜூலை முதல் தேதி மீண்டும் பகுதி சூரிய கிரகணம்..!
சூரிய குடும்பம், ஒரு மணல் துகள் போல, பால்வழி மண்டலத்தை 22 1/2 கோடி ஆண்டுகளில் ஒரு சுற்று சுற்றி முடிக்கிறது.
பூமி, தன் துணைக் கோளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே சூரியனைச் சுற்றிகொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை, பூமியை 29 1/2 தினத்தில் சுற்றுகிறது. அது மட்டுமல்ல. சூரியனாவது சும்மா இருக்கிறதா? சூரியனும் கூட தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை(MilkyWay galaxy), தனது குடும்ப உறுப்பினர்களான கோள்கள், துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், குயிப்பர் வளையம், ஊர்ட் மேகம், மற்றும் வால் மீன்கள் என தனது அனைத்து குஞ்சு குளுவான்கள் படை சூழ நொடிக்கு சுமார் 250 -270 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு முடிய சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்றும் சொல்லப்படுகிறது
அனைத்து கோள்களும், சற்றே சாய்ந்த நிலையில்
பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட, 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்த காலகதியில், பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஏனெனில் சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, எல்லா முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை. அது போல எல்லா அமாவாசை தினத்திலும், சூரிய கிரகணமும் உருவாவதில்லை.
சூரியனுடன் ஒப்பிடும்போது, சந்திரன் ரொம்ப பொடிசு. அதன் விட்டம், 384,400 கி.மீ மட்டுமே. இதில் சூரியன் சந்திரனைவிட 4,00 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த அரிதான ஒற்றுமையால் தான், குட்டியூண்டு நிலவும், இம்மாம்.. பெரிய் ..ய் ..ய சூரியனும், பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது, ஒரே அளவில் தென்படுகின்றன. ௦௦குட்டியூண்டு ..சின்ன நிலா, நம் குடும்ப தலைவரான, மிகப் பெரிய சூரியனை மறைத்து, முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலேதான். .
பொதுவாக, ஒரு வருடத்தில், 2-5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள் தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின், மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிமிடங்கள் மட்டுமே. எப்போதும் வட, தென் துருவங்களில், பகுதி சூரிய கிரகணமே தெரியும். நிலநடுக்கோட்டு அருகே கிரகணம் நிகழும்போதுதான் முழு சூரிய/சந்திர கிரகணம் உண்டாகிறது. ஒரே மாதிரியான சூரிய கிரகண நிகழ்வுகள், (நேரம், வகை போன்றவை). 18 வருடம் , 11 நாட்கள் (6.585.32 நாட்கள்) நிகழும். இதற்கு சாரோஸ் சுழற்சி(Saros cycle) என்று பெயர். பொதுவாக, கிரகணம் சூரிய உதயத்தில் துவங்கி, பூமியின் ஏதாவது ஒரு பாதியில் சூரியன் மறையும் போது முடிவடைகிறது. ஒரு வருடத்தில் பூமியில், எங்காவது இரு இடங்களில் கட்டாயம் சூரிய கிரகணம் நிகழும். இந்த கிரகணத்தில், கிரகண நிழலின் வேகம் 1,770 கி.மீ./மணி நிலநடுக்கோட்டுக்கு அருகில். ஆனால் துருவங்களில், கிரகண வேகம் பொதுவாக 8,046 கி .மீ/மணி. முழு சூரிய கிரகணம் 1 .5 வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது. சூரிய கிரகண பாதையின் அகலம் 269 கி.மீ. பகுதி சூரிய கிரகணம், பூமியின் மற்ற இடங்களுக்கு, முழு கிரகண பாதை தாண்டி 4,828 கி.மீ தூரம் வரை தெரியும்
முழு சந்திர கிரகணம்
ஜூன் 15 ம் நாள் நமக்கு காட்சி அளிக்கப் போவது, முழு சந்திர கிரகணம். பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் (Totality) அதிக பட்சம் 107 நிமிடங்கள். ஆனால், பூமியில் நிழல் சந்திரனைத் தொடுவதிலிருந்து, சந்திரனின் அடுத்த எதிர் முனையில் விடுவது வரை உள்ள நேரம் சுமார் 4 மணி நேரம் வரை நீட்டிக்கலாம். பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றுவதால், சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால், அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும்.எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.
இந்த ஆண்டின்(2011) முதல் சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள் நிகழ உள்ளது. ஜூன் 15ம் நாள் வரவுள்ள சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் சரியாக 100 நிமிடங்கள். இது சந்திரனின் உயர் சந்திப்பு பகுதியில், தெற்கு ஒபியுக்கசுக்கு(southern Ophiuchus)அருகில், மேற்கு லாகூன் நெபுலா(Lagoon Nebula ,M8)க்கு 7 பாகையில் நிகழவுள்ளது. இங்கே, சந்திரனில் கருமைப் பகுதி/முழு மறைப்பு நேரம் 100 நிமிடங்கள் அதிகமாக நீட்டிக்கும். இதற்கு,முன் ஜூலை 2000 ஆண்டில்தான், இந்த மாதிரி நீண்ட கிரகணம் வந்தது. இந்த முழு கிரணத்தின்போது சந்திரன், நொடிக்கு ஒரு கி. மீ வேகத்தில் கிரகண பகுதியை கடக்கும். கிரகணத்தின் போது, அதன் நிழல் விழும் பகுதியின் கருப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை, முறையே, அம்பரா(Umbra), பெனும்பரா(Penumbera) என்று சொல்கின்றனர். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரிய கதிர்சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்க்க நேரிட்டால், சூரியன் , சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசைகளில் அற்புதமாய் தெரியும். இந்த ஆண்டு, ஜூன் 15ம் நாளில் நிகழ உள்ள கிரகணம் இந்த வகையைச் சேர்ந்தது. இந்த மாலை மயங்கும் வேளையில், நாம் ஒரே நேரத்தில் சூரிய மறைவையும், சந்திர உதயத்தையும் தொடுவானுக்கு அருகில் பார்க்கும்போது, செலனோஹிலியன்(selenehelion ) என்ற நிகழ்வு உண்டாகிறது. மேலும் இந்த சமயத்தில் இப்படி சூரிய மறைவு மற்றும் சந்திர உதயத்தில் சூரிய, சந்திரனுடன், மாலை வேளையில் சந்திர கிரகணம் தெரிவதை படுக்கைவச கிரகணம் என்றும், சொல்கின்றனர்.
ஜூன் 15 நிகழவுள்ள இந்த கிரகண நேரம்:
முழு சந்திர கிரகணம்.. துவக்கம் முதல்.. முடிவு வரை
பெனும்பரா(Penumbra) கிரகணம் துவக்கம்: 17 .24 .34 UT.
பகுதி சந்திரகிரகணம் துவக்கம்: 16 .22 .56 UT
முழு மறைப்பு துவங்குநேரம்:
அதிக பட்ச முழு கிரகணநேரம்:
பகுதி கிரகணம் முடியும் நேரம்:
பெனும்பரா கிரகணம் முடியும் நேரம் :
கிரகண நேரம்:
முழு மறைப்பு நேரம் : 1 மணி, 40 நிமிடம்,52 நொடிகள்
பகுதி கிரகண நேரம்...: 3 மணி, 39 நிமிடம்,58 நொடிகள்.
பெனும்பரா கிரகண நேரம்: 5 மணி,39 நிமிடம், 1 வினாடி.
இந்திய நேரப்படி,2011 , ஜூன் 15 ன், முழு சந்திர கிரகணம்:
பெனும்பரா பகுதிக்குள் : இரவு 10 மணி, 52 நிமிடம், 52 நொடி .ஜூன் 15
. கருமைநிற பகுதி சந்திர கிரணத்துக்குள்:11 மணி,52 நிமிடம், 24நொடி
முழு மறைப்பு கிரகணம் :இரவு ௦0.மணி,51 நிமிடம், 57 நொடி ..ஜூன் 16
அதிக பட்ச கிரகணம் . ....:விடிகாலை,1 மணி,42 நிமிடம்,24 நொடி ஜூன் 16
முழு மறைப்பின் முடிவு..:காலை 2 மணி, 32 நிமிடம்,50 நொடி
கருமை நிற பகுதி கிரகணம் முடிவு:ஜூன் 16 காலை, 3மணி, 32 நிமிடம், 22 நொடி
நிலா பெனும்பராவை விட்டு விலகுவது: ஜூன் 16 , விடிகாலை, 4 மணி, 32 நிமிடம், 02 நொடி.
அரிதான.. மிக .. இருண்ட.. சந்திர.. கிரகணம்..!
இந்த ஆண்டு ஜூன் 15 ம் நாள் ஏற்பட உள்ள முழு சந்திர கிரகணம் ஓர் அரிதான நிகழ்வே..! ஏனெனில் இந்த கிரகணத்தின் போது , சந்திரன் பூமியின் மைய நிழலை ஒட்டி பயணிக்கும். இது போலவே ஒரு முழு சந்திர கிரகணம், கி.பி. 2000 ஆண்டு, ஜூலை 16 ல் உண்டானது. இனி இதனை ஒத்த முழு சந்திர கிரகணம், கி.பி.2018 , ஜூலை 27 ம் நாள்தான் வரும். இந்த கிரகணத்தை முழுமையாக, உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இது ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும். தென்னமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இக்கிரகணம், துவங்குகிறது. மேற்கு ஆசியா , ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்சில், ஜூன் ௧௬ ம் நாள் சூரிய உதயத்துக்கு முன்,கிரகணம் முடிகிறது. இப்போது வந்துள்ள முழு சந்திர கிரகணம், சாரோஸ் சுழற்சியின் 130 வது வகை. இந்த வகையில் மொத்தம் 72 கிரகணங்கள் நிகழும், இது 34 வது கிரகணம்.இந்த வகை சாரோஸ் சுழற்சி, 1262 ஆண்டுகளில் முடியும். இனி அடுத்த சந்திர கிரகணம், 2011 , டிசம்பர் 10 ம் நாள் ஏற்பட இருக்கிறது.
முழு சந்திர கருப்பு கிரகணம்
பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் செம்பு வண்ணத்தில் மிளிரும். ஆனால் இம்முறை அப்படி இருக்காது. நிலா கருப்பு நிலாவாக காட்சி அளிக்கும். இதனைத் தொடர்ந்து பார்த்து பழக்கமில்லாத நண்பர்களுக்கு, கிரகணத்தின் போது, சந்திரனைக் கண்டறிவதே சிரமம்தான். சூரியன், பூமி மற்றும் சந்திரனின் மையங்கள் ஒரே நேர்க் கோட்டில் அமைவதால் /வருவதால்தான் சந்திரன் இப்படி இருட்டாக இருக்குமாம். மேலும் சமீபத்தில் ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை வெடித்து புகை மற்றும் சாம்பலை அள்ளி வளி மண்டலத்தில் வீசியதே..! அதுவும் கூட, இந்த இருண்ட முழு சந்திர கிரகணத்தின் ஒரு காரணியாகும். !முழுமையும் வானம் இருட்டாக, சந்திரனைக் காண முடியாமல் போவதால், மிகவும் ஒளி குறைவாய் தெரியும் விண்மீன்களைக் கூட இப்போது பார்க்கலாம். ! இதற்கு முன்னால், இப்படி ஒரு முழு சந்திரகிரகணம், 1971 , ஆகஸ்ட் 6 ம் தேதி ஏற்பட்டது. அடுத்து இது போல ஒரு முழு சந்திர கிரகணம், இன்னும் 47 ஆண்டுகள் கழிந்து, 2058 , ஜூன் 6 ம் நாள் வரவிருக்கிறது. இப்போதுள்ளவர்களில் எத்தனை மனிதர்கள், 47 ஆண்டுகளுக்கு அப்புறம் இப்படியான சந்திர கிரகணத்தைப் பார்க்கப் போகிறோம்...!
முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கருப்பாகத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கருப்பாக/இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை. சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக,சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதி பலிக்கின்றன. இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கன்னங்கரேல் என கரித்துண்டம்/கருப்பு நிலாவாக காட்சி அளித்திருக்கும். பூமியின் வளிமண்டலம்தான், அதில் பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான் , முழு சந்திர கிரகணத்தின் போது, அதனை சிவப்பான செம்பு நிலாவாகக்(copper moon) காட்டுகிறது.இதுவேதான், சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு-ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்..!
பால்வழி மண்டலம்
சாதாரணமாய் நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும் நமது சூரிய குடும்ப தாய்வீடான, பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும். இம்முறை நீங்களும் பார்த்து மகிழுங்கள். இந்த முறை சந்திர கிரகணத்தின் போது, தெற்கு வானில், தனுசு விண்மீன் படலமும்,அதன் பிரகாச விண்மீனான பூரட்டாதி, அதன் அருகில் வலப்பக்கத்தில், அழகாகத் தெரியும், பால்வழி மண்டலத்தின் மையப் பகுதியையும் கண்டு ரசித்து மகிழலாம்.அது மட்டுமல்ல. இரவு வானின் பிரகாச விண்மீன்களான, வடக்கில் உச்சியில் தெரியும் பருந்து/வடக்குச் சிலுவையின் தெனாப்(Denob),அதன் அருகில் உள்ள கழுku (aquis) விண்மீன் படல திருவோணம்(Altair), கொஞ்சம் தள்ளி யாழ் விண்மீன்(Lyra) படலத்தின் வேகா(Vega), இவை உருவாக்கும், கோடைக்கால முக்கோணம் (Summer Trianle) போன்றவற்றை பார்த்து பரவசப்படலாம்.
சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது. ஏனெனில் முழு சூரிய கிரகணம், உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால்,முழு சந்திர கிரகணம், உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும். சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம் , சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty.) சோயு-சூ புத்தகத்தில், கி.மு 1136 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 29 ம் நாள் நிகழ்ந்ததாய் குறிப்பிடப் பட்டுள்ளது.
பழங்காலத்தில், கிரகணம் என்ன என அறியப்படாதபோது, அவை ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர் முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று. மக்களும் நம்பினர். இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது.அதற்கு முன்னால், கி.மு.413 , ஆகஸ்ட் 28 ம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.மதகுருவின் சொல்படி எதெனியர்கள் நடந்தனர்.ஆனால் சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர்.ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார்.சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால்,ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.
மக்களை.. மிரட்டிய.. கொலம்பஸ்..!
கிறிஸ்டோபர் கொலம்பஸ் உலகை வலம் வந்தவர் என்ற தகவல் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவர் பெரிய கில்லாடி..! அவர், 1503 , ஜூன் 30 , ஜமைக்கா போய் இறங்கி, அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கினார். அங்கிருந்த பூர்வகுடி மக்கள், வந்தவர்களை வரவேற்று உணவும் அளித்தனர். ஆனால் கொலம்பஸின் மாலுமிகள் அம்மக்களிடம் ஏமாற்றி, திருடினர். இதனால் கோபம் கொண்ட மக்கள் அவர்களுக்கு உணவு தர மறுத்து விட்டனர். இந்த சமயம் பார்த்து, அப்போது முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. கொலம்பஸ் கடற் பயணத்துக்காகவும், சொந்த தேடல் மற்றும் ஆர்வத்தாலும், கால நிகழ்வுகள் குறித்த, ஒரு காலண்டரை வைத்திருந்தார். அதில் முக்கிய நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி, அப்போது வரும் முழு சந்திர கிரகணம் அறிந்து, இதன் மூலம் அந்த மக்களை மிரட்ட திட்டமிட்டார். அவர்களின் தலைவனைக் கூப்பிட்டு, கடவுள் உங்கள் மேல் கோபம் கொண்டிருக்கிறார். இரவின் ஒளியை/ சந்திரனை உங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளப் போகிறார், என்றார். தலைவர் இதனை நம்பவில்லை. முழு சந்திர கிரகணம் வந்தது. ஊர் இருண்டது. சந்திரன் மறைந்தான்; ஊர் மக்கள் கொலம்பசிடம் வந்தனர். அவரின் குழுவுக்கு உணவும், உதவியும் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தனர். பின் வழக்கம் போல், பூமியின் நிழல் விலகியதும், சந்திர ஒளி ஜமைக்கா மேல் விழுந்தது. மக்கம் மகிழ்ச்சி கொண்டனர். எப்படி இருக்கிறது.. இந்த வரலாற்றுத் தகவல்..! எப்போதும் மெலிந்தோரை வலியோர் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டே இருப்பது தெரிய வருகிறதா?
மூட நம்பிக்கையால்.. மூடப்பட்ட.. மக்கள்..!
பொதுவாக,தினம் தினம், சந்திரன் உதிப்பதில்லை. காரணம் நாம் அறிவோம். தினமும் சூரியன் நமக்குத் தெரிகிறது. அது நகர்வது போல தோன்றினாலும், அது நகர்வதில்லை. நாம்தான் சூரியனைச் சுற்றுகிறோம். கிரகணத்தின் போது எந்த சிறப்பு கதிரும் சூரியனிடமிருந்து வருவதில்லை . அப்போது வருகிறது என்று சொல்லப்படும் அகசிவப்பு கதிர், காமாக் கதிர்கள், எப்போதும் சூரியனிட மிருந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம் வெயிலில் போனால் உடலோ, பொருளோ சூடாவதுக்கு காரணம் அகச்சிவப்பு கதிர்களே. பிரபஞ்சம் முழுவதும் காமாக் கதிர்கள் உள்ளனவே. ஆனால், கிரகணம் தொடர்பான, கட்டுக்கதைகளையும், மூட நம்பிக்கைகளையும், ஊடகங்கள் சும்மா, சகட்டு மேனிக்கு அவிழ்த்துவிட்டே இருக்கின்றன. கிரகணம் எப்படி வருகிறது என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே, கிரகணம் முடிந்ததும், குளித்து, தர்ப்பணம் செய்கிறார். இது எவ்வளவு சரி? அது மட்டுமல்ல, வானுக்கு விண்கலத்தை அனுப்பும், இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் கூட, சாமி கும்பிட்டு, தீபாராதனை செய்த பின் தான், விண்கலம் அனுப்பும் பட்டனைத் தட்டுகின்றனர். இன்று அறிவியல் உலகின், பல அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அதனுடனே மூட நம்பிக்கைகளையும் போர்த்திக் கொண்டு வாழ்வது என்ன நியாயம்.?
- பேரா.சோ.மோகனா ( mohanatnsf@gmail.com)