தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். ஆஸ்திரேலியாவில், இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தாங்கள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சிட்னி நகரின் பரபரப்பு மிக்க சாலைகளில் மிகப்பெரிய அளவிலான விளம்பரப்பலகைகளை நிறுவியுள்ளது இந்த அமைப்பு. கடந்த மே 26 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த விளம்பரங்கள் இன்னும் நான்கு வார காலத்திற்கு அந்த பகுதிகளில் நீடிக்கும். இது குறித்த செய்தி ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க நாளிதழான "சிட்னி மார்னிங் ஹெரால்ட்"டில் வெளிவந்தவுடன் கூடவே பரபரப்பும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. இந்த விளம்பர பலகைகள் பற்றி கருத்து தெரிவிக்கும் இந்த பத்திரிகை "கிருத்துவ நம்பிக்கையின் அடிப்படையிலேயே கை வைப்பதாக உள்ளன இந்த விளம்பரங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது. அப்படி என்ன இருக்கின்றது அந்த விளம்பர பலகையில்? பின்வருவது தான் அந்த விளம்பர பலகைகளில் உள்ள வாசகம், Jesus: A Prophet of Islam - இயேசு : ஓர் இஸ்லாமிய இறைத்தூதர்மேற்கண்ட வாசகத்திற்கு பக்கத்தில் இந்த அமைப்பின் தொலைப்பேசி எண்கள் மற்றும் வலைத்தள முகவரி கொடுக்கப்பட்டு "குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை" இலவசமாக பெற தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.             

இந்த விளம்பரங்கள் குறித்து விளக்கமளிக்கும் இத்திட்ட அமைப்பாளர் தியா முஹம்மத் (Diaa Mohamed), முஸ்லிம்களையும் கிருத்துவர்களையும் ஒரு பொதுவான பார்வையின் கீழ் கொண்டுவரவும், முஸ்லிம்கள் ஏசுவை நம்புகின்றவர்கள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே இந்த விளம்பரங்கள் என்று கூறியுள்ளார். வரும் நாட்களில் மேலும் சில வாசகங்களை கொண்ட விளம்பர பலகைகள் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வாசகங்கள்,  
  • Holy Qur'an: The Final Testament - புனித குர்ஆன் : கடைசி ஏற்பாடு.    
  • Muhammed (s): A Mercy to Mankind - முஹம்மது (ஸல்): மனிதகுலத்தின் கருணை. 
  • Islam: Got Questions? Get Answers - இஸ்லாம்: கேள்விகளா? பதிலை பெற்று கொள்ளுங்கள். 

இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளன. இரு நாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரப்பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது. தாங்கள் இதற்காக பின்வாங்க போவதில்லை என்றும், அந்த விளம்பரங்கள் மூலம் தங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை பாசிடிவ்வாகவே இருந்ததாகவும், சுமார் பத்து சதவித அழைப்புகள் மட்டுமே தங்களை தாக்கக்கூடிய எண்ண அலைகளில் இருந்ததாவும் தியா முஹம்மத் தெரிவித்துள்ளார். மேலும், சேதப்படுத்தப்பட்ட அந்த பலகை விரைவிலேயே சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் செயற்திட்டம் எதிர்ப்புகளை சந்திக்க ஆரம்பித்துள்ள நிலையில் இவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகின்றது. அதாவது, நான்கு வார காலத்திற்கு, சிட்னியின் முக்கிய வழித்தடங்களில் ஓடும் சுமார் நாற்பது பேருந்துகள் தங்களது இஸ்லாமிய விளம்பரங்களை தாங்கி செல்லும் என்று அறிவித்துள்ளது இந்த அமைப்பு.பேருந்துகளின் பின்புறத்திலும், பக்கவாட்டிலும் இருக்கும் இந்த விளம்பரங்கள், "இஸ்லாம் குறித்த கேள்விகளா? தொடர்பு கொள்ளுங்கள் இந்த எண்களில்" என்று இருக்குமாம். இது குறித்த மாதிரியை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது "My Peace".      


நீங்கள் மேலே பார்த்தது மட்டுமின்றி, தங்களின் அடுத்தக்கட்ட திட்டமாக, தொலைக்காட்சிகள் வழியாகவும் தங்களது இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள போவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் வலைத்தளம் பல்வேறு தகவல்களை கொண்டதாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது (தள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). தங்களது செயற்பாடுகளாக இவர்கள் கூறியுள்ளது, 
  • இஸ்லாம் குறித்த தவறான புரிந்துணர்வுகளை கையாள்வது, 
  • சக ஆஸ்திரேலியர்களுக்கு இஸ்லாம் பற்றி எடுத்து சொல்வது, 
  • இஸ்லாம் குறித்த எவ்விதமான கேள்வியையும் முஸ்லிமல்லாதவர்கள் கேட்க முன்வருமாறு அழைப்பது,   
  • குர்ஆன் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை இலவசமாக அளிப்பது, 
  • பள்ளிவாசல்களுக்கு முஸ்லிமல்லாதவர்களை அழைத்து செல்வது, 
  • எந்தவொரு தலைப்பிலும் சொற்பொழிவாற்ற தயாரான நிலையில் அறிஞர்களை வைத்திருப்பது,

மேலே குறிப்பிட்டுள்ளவை மட்டுமின்றி புதிய முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் மிக மும்முரமாக செயல்படுகின்றனர் இந்த இயக்கத்தினர். அல்ஹம்துலில்லாஹ். பெண்களுக்கான பகுதியும் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. உலகளவில் பல இஸ்லாமிய இயக்கங்களை கண்டு நான் வியந்துண்டு. தங்கள் மார்க்கத்தின் மீதான ஆழ்ந்த பற்று, எவ்வித கேள்விக்கும் தங்களிடம் பதில் உண்டு என்ற அசராத நம்பிக்கை, அதனை வெளிப்படுத்தும் விதமான விவாதங்கள், நேர்த்தியான முறையில் வடிவமைப்பட்ட செயற்திட்டங்கள் என்று இந்த இயக்கங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அந்த வரிசையில் இப்போது "My Peace"சும் சேர்ந்துள்ளது. மாஷாஅல்லாஹ்...
குறிப்பு: 

நாம் மேலே பார்த்தது போன்ற செயல்திட்டத்தை "Gain peace" என்ற அமைப்பு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் செயல்படுத்தி வருவது இங்கே நினைவுகூறத்தக்கது

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 
நன்றி ;பொதக்குடி TNTJ