ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் நிலங்களில் இருந்து பலஸ்தீனர்களை முற்றாகத் துடைத்தெறியும் ஸியோனிஸக் கொள்கையின் அடிப்படையில் கர்னாப், ஃபாரா, நெகெவ் ஆகிய மூன்று கிராமங்களில் இருந்த பலஸ்தீனர்களின் வாழிடங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை புல்டோஸர்களால் இடித்து நிர்மூலமாக்கியுள்ளது.
இது குறித்துக் கருத்துரைத்த பிராந்தியக் கவுன்ஸில் தலைவர் இப்றாஹீம் அல் வகீலீ, "அரபுகளின் வாழிடங்களைத் தகர்த்து நிர்மூலமாக்குவதென்பது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபைக்கு மிகுந்த மகிழ்ச்சிதரும் ஒரு விடயமாகவே உள்ளது. மேற்படி மூன்று பலஸ்தீன் கிராமங்களில் உள்ள பலஸ்தீன் மக்களின் வீடுகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினால் வாரந்தோறும் இடிக்கப்பட்டே வருகின்றன" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
"ஸியோனிஸ ஆக்கிரமிப்பு அதிகார சபையின் உள்ளக அமைச்சினால் அமுல்நடாத்தப்பட்டு வரும் கட்டடத் தகர்ப்பு நடவடிக்கை மூலம் இம்முறை அழிக்கப்படுவது வெறுமனே கட்டடங்கள் மட்டுமல்ல, பலஸ்தீனர்களின் வாழ்க்கையும் தான்" என்று குறிப்பிட்ட அவர், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை சரியாக பலஸ்தீன் மாணவர்கள் தமது இறுதித் தவணைப் பரீட்சைகளை எதிர்நோக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமது கட்டடத் தகர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் பலஸ்தீன் மாணவர்களை உளவியல் ரீதியான அழுத்தத்துக்குள்ளாக்கி, அவர்களைப் பரீட்சையில் தோல்வியடையச் செய்வதன் மூலம் கல்வியில் பின்னடைய வைப்பதே ஆக்கிரமிப்பாளர்களின் திட்டமாகும்" என்று வலியுறுத்தியுள்ளார்.