ரமல்லாவில் உள்ள இஸ்ரேலிய பிரிவினைச் சுவரை அடுத்திருக்கும் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை எரியூட்டியுள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (13.06.2011) இரவு ஸஃபா எனும் பலஸ்தீன் கிராமத்தில் இந்த அக்கிரமம் அரங்கேறியுள்ளது. நூற்றுக்கணக்கான தூனம் (1 தூனம் = 1000 சதுர அடிகள்) பரப்புள்ள பெரும் நிலப்பரப்பு தீமூட்டப்பட்டதையடுத்து, கிராவாசிகள் தீயை அணைப்பதற்காக முன்வந்தபோது, அவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டனர் என்றும், பயிர்நிலம் முற்றாக எரிந்து முடியும்வரை இந்த நிலைமை நீடித்தது என்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக, 'அடர்ந்து வளர்ந்துள்ள பயிர்களினூடே பலஸ்தீனர்கள் ஊடுருவிச்சென்று பிரிவினைச் சுவரை அண்மிக்க முடியும் என்ற ஐயப்பாடு நிலவுவதாலேயே இப்பயிர் நிலங்கள் அழிக்கப்பட்டன' என இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்பு கல்கிலியா பிரதேசத்தின் அஸுன் கிராமத்தின் பல தூனம் பரப்புள்ள விவசாய நிலமும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் எரியூட்டி நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான மிகப்பெரும் நிலப்பரப்பு எரியூட்டப்பட்டும் புல்டோஸர்கள் ஓட்டப்பட்டுமாக தொடர்ச்சியாக நிர்மூலமாக்கப்பட்டு வருவதன் மூலம் பலஸ்தீன் விவசாயிகளின் பொருளாதார நிலைமை மிக மோசமாகப் பின்னடைந்துள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் இந்த அழிப்பு நடவடிக்கையின் விளைவால் நட்டமடையும் விவசாயிகளுக்கோ நிலச் சொந்தக்காரர்களுக்கோ எத்தகைய நட்டஈடும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியமான தமது சொந்த மண்ணில் இருப்பிடங்களையும் நிலங்களையும் அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு அகதிகளாகவும், வாழ்வாதாரத்தையே இழந்துவிட்ட வறியவர்களாகவும் வாழ நேர்ந்துள்ள அவலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு சர்வதேச அமைப்புக்களும், உலக மனித உரிமைகள் அமைப்புக்களும் துரிதமாக முன்வரவேண்டும் என பாதிக்கப்பட்ட பலஸ்தீன் மக்கள் விடுக்கின்ற இடையறாத கோரிக்கை, சர்வதேச அரங்கில் ஆங்காங்கே சில அதிர்வலைகளை ஏற்படுத்தவும் தவறவில்லை எனத் தெரிகின்றது.