தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

சிறுபான்மை நலத் துறை அமைச்சகம் சம உரிமைக்கான அமைச்சகமாக மாற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்

சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் சம உரிமைக்கான அமைச்சகமாக மாற்றப்பட வேண்டும் என மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

"இந்தியாவின் சிறுபான்மையினர்: விவகாரங்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்' என்ற தலைப்பில் சென்னை எஸ்.ஐ.இ.டி. பெண்கள் கல்லூரியில் சனிக்கிழமை சிறப்பு சொற்பொழிவாற்றிய மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியது:

நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையிலான சச்சார் கமிட்டி, இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு நிதி ஒதுக்குவது, திட்டங்களை வகுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த அறிக்கையில் சிறுபான்மையின சமூகத்தை பாதிக்கும் வகையிலான சில அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அதாவது சிறுபான்மையின சமூகங்கள் முழுவதும் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ரூ. 5 ஆயிரம் கோடி பட்ஜெட்டைக் கொண்ட சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தின் கீழ் சிறுபான்மை சமூகங்கள் கொண்டுவரப்படும்போது, ரூ. 65 ஆயிரம் கோடி பட்ஜெட் நிதியை கொண்ட மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உள்ளிட்ட அதிக வரவு செலவு திட்டங்களைக் கொண்ட பிற துறைகளிடமிருந்து நிதி உதவியை பெற இயலாத நிலை ஏற்படும்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமைகள் கிடைக்கும் வகையில் சிறுபான்மை நலத் துறை அமைச்சகம், சம உரிமைகளுக்கான அமைச்சகமாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.

சச்சார் கமிட்டி அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதுபோல், சம உரிமைகளுக்கான கமிஷன் அமைக்கப்பட்ட உடன், சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தை மாற்றுவது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்.

அப்போதுதான் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, பொருளாதார நிலையில் உயர முடியும்.

அதே நேரம் இஸ்லாமிய சமூகத்தினர், தங்களுடைய சமூகத்தின் வளர்ச்சியை குறித்து மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்காமல், ஊழல் ஒழிப்பு, மனித உரிமைகள் உள்ளிட்ட சமூதாய நலனிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். லோக்பால் விவகாரம், விநாயக் சென் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில் முஸ்லிம்கள் அமைதி காத்து வருவது ஏன்?

வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், இங்குள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனங்களும், அமைப்புகளும் உத்தரபிரதேசம், பிகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களை தொடங்க முன்வரவேண்டும்.

உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக விவகாரத்தைப் பொருத்தவரை, துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்குமாறு, பல்கலைக்கழக ஆசிரியர்களும் நிர்வாகிகளும் அரசிடம் முறையிட்டிருப்பது தவறான முடிவு. சிறுபான்மை நிறுவனங்கள் தங்களுடைய பிரச்னைகளுக்கு, தாங்களே தீர்வு காண வேண்டும். அரசியல் தலையீடுகளை அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.

கல்வி உதவித் தொகை உயர்வு: மேலும் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக ஒதுக்கப்பட்டுவந்த ரூ. 44 லட்சம் நிதி, வரும் கல்வியாண்டு முதல் ரூ. 60 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதுபோல் ஆராய்ச்சி (பிஎச்.டி) உதவித் தொகையை பெறும் சிறுபான்மையின மாணவர்களின் எண்ணிக்கையும் 750-லிருந்து 1,400-ஆக உயர்த்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின் (எஸ்.ஐ.இ.டி.) தலைவர் மூசாராசா, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி தாளாளர் பைசூர் ரஹ்மான் சையத், கல்லூரி முதல்வர் ரௌசின் தாவூத் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.