தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

உள்நாட்டு போர் வெடிக்கும் என்று கடாபி மகன் எச்சரிக்கை

Gaddafi's son says Libya faces bloody civil war - World News Headlines in Tamil
திரிபோலி, பிப். 21
லிபியாவின் தலைவர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடாபியின் மகன் செய்ப் அல்-இஸ்லாம் கடாபி லிபியாவில் நடந்து வரும் போராட்டம் காரணமாக உள்நாட்டு போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார். 
லிபியாவில் கடந்த 1969-ம் ஆண்டு ரத்தம் சிந்தாத புரட்சி மூலம் ராணுவ தளபதி கடாபி ஆட்சிக்கு வந்தார். அவர் 42 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்து வருகிறார். அவர் தான் உலகிலேயே அதிக காலம் ஆட்சியில் இருக்கும் அதிபர் ஆவார். அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பென்காசி நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டக்காரர்கள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. மக்கள் மீது ஏவுகணைகளும் வீசப்பட்டன. அதோடு பீரங்கிகள் மூலமும், துப்பாக்கியால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க முயன்றது.
அதோடு கடாபியின் ஆதரவு குண்டர்கள் வாளால் எதிர்ப்படும் போராட்டக்காரர்களின் கைகளை வெட்டினார்கள். இதனால் சாவு எண்ணிக்கை அதிகரித்தது. ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், இறந்தவர்களில் பலர் தலையில் விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் தாக்கப்பட்டு தான் பலியானார்கள் என்று குறிப்பிட்டனர். பலர் தலையிலும், மார்பிலும் சுடப்பட்டு இறந்தனர்.
பென்காசி நகர இஸ்லாமிய மதகுருமார்கள் மற்றும் மத தலைவர்கள் சொந்த நாட்டு மக்களையே ராணுவம் சுட்டுக்கொல்வதற்கு கண்டனம் தெரிவித்தனர். ராணுவம் தன் நாட்டு மக்களை சுட்டுக்கொல்வதை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். ஆஸ்பத்திரிகளில் காயம் அடைந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவு இருந்தது. அவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரிகளில் குவிந்துவிட்டனர். கடந்த 6 நாட்களாக நடந்த இந்த போராட்டத்தில் ராணுவ அடக்குமுறையால் இதுவரை 140-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
திரிபோலி நகரிலும் போராட்டம் நடந்தது. அதையும் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது. போராட்டக்காரர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை நேரில் பார்வையிடுவதற்காக கடாபி தானே காரை ஓட்டிக்கொண்டு திரிபோலி நகர தெருக்களில் வலம் வந்து கண்காணித்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டு தங்கள் கை முஷ்டியை உயர்த்தியபடி கடாபிக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
பென்காசி நகரில் முதல் நாள் தாக்குதலில் பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்து விட்டு திரும்பிய போராட்டக்காரர்களை ராணுவம் இழுத்துச்சென்று நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அடைத்து வைத்தது. பிறகு அவர்கள் அனைவரையும் சுட்டுக்கொன்றது. லிபியாவில் இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டது. மொபைல் போன் இணைப்புகளும் அடிக்கடி செயல் இழக்க செய்யப்பட்டன.
இந்நிலையில் லிபியா தொலைக்காட்சியில் தோன்றி பேட்டியளித்த கடாபியின் மகன் செய்ப் அல்-இஸ்லாம் கடாபி லிபியாவில் நடந்து வரும் போராட்டம் காரணமாக உள் நாட்டு போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், எண்ணெய் கினறுகள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. சில ராணுவ முகாம்கள், டேங்குகள் மற்றும் ஆயுதங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். இப்போராட்டம் நடத்துவதற்கு துனிசியாவோ எகிப்தோ அல்ல. ராணுவம் இது போன்ற போராட்டங்களை சந்திக்காததால் போராட்டத்தின்போது ராணுவம் தவறு செய்துவிட்டது என்று கூறினார்.