தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

காவிகள் போடும் தேசபக்தி நாடகம்!!!

அவர்கள் திருந்துவதற்காக இவ்வாறே சான்றுகளை தெளிவுப்படுத்துகிறோம். (அல்குர்ஆன்: 7: 174)

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தை விதைக்க சங்பரிவார சதிகாரக் கூட்டம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்ற நச்சுக் கருத்தை விதைப்பதுதான் இவர்களின் நோக்கம்.

தேசப்பற்று என்றால் என்ன? என்ற அரிச்சுவடி கூட தெரியாத மூடர்கள்தான் - அல்லது தெரியாதது போல் நடிப்பவர்கள் தான் - பாஜக தலைவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

தேசப்பற்று அவசியம் என்பதில் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லீமுக்கும் இரண்டாவது கருத்து இல்லை. தேசத்துக்கு ஆபத்து என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் முஸ்லீம்களுக்கும் சேர்த்துத் தான் ஏற்படும் என்பதை இந்திய முஸ்லீம்கள் ஒவ்வொருவரும் அறிந்தே வைத்துள்ளனர். தேசத்தை நேசிப்பதில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.

தேசத்தின் மீது பற்று இருந்த காரணத்தால் தான் பாஜகவின் முன்னோடிகள் வெள்ளையர்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்த போது வெள்ளையனுக்கு எதிராக உயிரைக் கொடுத்து முஸ்லிம்கள் போராடினார்கள்.

தங்களுக்கு என தனி நாடு உருவான போதும் தங்கள்  நாட்டை விட்டு போகாமல் இங்கேயே தங்கி தேசப்பற்றை சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபித்துக் கொண்டிருக்கும் ஒரே சமுதாயம் முஸ்லிம்கள் மட்டுமே. மற்ற எந்த சமுதாயத்துக்கும் இந்தப் பரிட்சை வைக்கப்படவில்லை.

ஆனாலும் ஆங்கிலேயனுக்கு வால் பிடித்த பரம்பரையில் வந்தவர்கள் இன்று தேசப்பற்றின் ஓட்டு மொத்த குத்தகைதாரர்களாக வேடம் போட்டு தேசியக் கொடியை ஏற்றப் புறப்பட்டிருப்பது கேவலத்திலும் கேவலமாகும்.

காஷ்மீரில் இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு அங்குள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது தான் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படு கின்றது. சங்பரிவாரக் கும்பலால் திரித்துக் கூறப்படுகிறது. 

காஷ்மீரில் இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்றுவதும், ஏற்றுவோம் எனக் கூறுவதும்தான் அரசியல் சட்டப்படி தேச விரோதச் செயலாகும். முதலில் தேசம் என்றால் என்ன? தேசப்பற்று என்றால் என்ன? காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வரலாறு என்ன? என்பதை விளங்கிக் கொண்டால் பாஜகவினர் செய்யும் இந்தச் செயல் எப்படி தேசவிரோத நடவடிக்கையாக உள்ளது என்பது விளங்கும்.

இந்தியா எனும் தேசத்தை ஒருவன் மதிக்கிறான் என்றால் நமக்காக நாமே உருவாக்கிக் கொண்ட சட்டத்தை அவன் மதிக்க வேண்டும். சட்டத்தில் சொல்லப்பட்டதை எதிர்த்து ஒருவன் செயல்பட்டால் அவன்தான் தேச விரோதியாவான். முதலில் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வரலாற்றை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த போது இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு நாடுகளாக ஆக்கப்பட்டன. ஆனால் காஷ்மீர் மாநிலத்தை வெள்ளையர்கள் இந்தியா வுடனும் சேர்க்கவில்லை. பாகிஸ்தானுடனும் சேர்க்கவில்லை. அதைத் தனி நாடாகவே விட்டுச் சென்றனர்.

இந்து மன்னரான ஹரிசிங் என்பவரின் ஆட்சியின் கீழ் அங்கே மன்னராட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி தன்னாட்சியுடன் பாகிஸ்தானுடன் இணைய 1947ல் ஒப்பந்தம் செய்தார்.

இதன் பின்னர் காஷ்மீர் மன்னரை இந்திய அரசாங்கம் சரிக் கட்டியதால் அவர் இந்தியாவுடன் நிபந்தனையின் அடிப்படையில் இணைய ஒப்புக் கொண்டு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உதவியை நாடினார்.

இதன்படி இந்திய ராணுவம் இந்திய எல்லையில் இருந்தும் பாகிஸ்தான் ரானுவம் பாகிஸ்தான் எல்லையில் இருந்தும் காஷ்மீருக்குள் நுழைந்தன. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைபற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் என்று பாகிஸ்தான் கூறுகிறது. அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று இந்தியா கூறுகிறது. எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றி கொண்டது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் நாட்டோடு காஷ்மீரை இணைத்துக் கொள்ள திட்டமிட்டதால் காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் 1948ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டபூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால் காஷ்மீர் மக்களிடம் ஒட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐநா சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பு கிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடகவே இருக்க வேண்டும் என விரும்புகி றார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

ஐநாவின் மூலம் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் நடைமுறைப்படுத்தவில்லை.

எப்படியாவது காஷ்மீரைத் தனதாக்கி கொள்ள வேண்டும் என்பதுதான் இரண்டு நாடுகளின் நப்பாசையாக இருந்தது. அதனால்தான் இதுவரை ஒட்டெடுப்பு நடத்தவில்லை.

ஓட்டெடுப்புக்கு விடாமல் இந்தியாவுடன் காஷ்மீரை எப்படியும் முழுமையாக இணைத்து விடவேண்டும் என்று நினைத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தாலும் அதன் தனித்தன்மைகள் காக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில்தான் காஷ்மீரின் மூன்றில் இரண்டு பாகம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இந்த உறுதிமொழி இந்திய அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டதால் ஒட்டெடுப்பு நடத்தும் திட்டத்தை இந்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது.

இந்திய அரசியல் சாசனத்தில் 370வது பிரிவு உருவாக்கப் பட்டு காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமையும் சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித்தொடர்பு ஆகியவை மட்டும் இந்திய அரசிடம் இருக்கும். மற்ற எல்லா அதிகாரமும் மாநில அரசிடம் இருக்கும்.

ஆளுநர் ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.

இதன்படி காஷ்மீரின் முதல் பிரதமராக (முதல்வராக அல்ல. பிரதமராக) 1951ல் ஷேக் அப்துல்லா பதவியேற்றாhர். மன்னர் ஹரிசிங்கின் மகன் கரன்சிங் ஜனாதிபதியானார்.

இதன் பின்னர் 370வது பிரிவில் சொன்னபடி நடக்காமல் 1954ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசை இந்திய அரசு கலைக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனச் சட்டம் வெளியிடப்பட்டு ஒப்பந்தம் மீறப்பட்டது.

பின்னர் 1957 ஜனவரி 26ல் இன்னும் ஒரு அரசியல் சாசனச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் இனி எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆக்கப்பட்டது.

ஐநா ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறியது போலவே இந்து மன்னரிடமும் முஸ்லீம் தலைவர்களிடமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் ஒவ்வொன்றாக மீறியது. 

பிரதமர் முதல்வராக ஆக்கப்பட்டார். ஜனாதிபதி கவர்னர் ஆனார். இப்படி கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் இந்திய அரசால் மீறப்பட்டது.

ஆனாலும் மீதமுள்ள மாற்றப்படாத மீறப்படாத ஒப்பந்த விதியின்படி காஷ்மீரின் தேசியக்கொடி இந்தியாவின் தேசியகொடி அல்ல. காஷ்மீருக்குஎன தனியான தேசிய கொடி என்பதுதான் இன்றுவரை உள்ள சட்ட நிலைமை.

இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பது போல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக் கொண்டு அதன்படி காஷ்மீருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இது குறித்து இந்திய அரசியல் சாசனம் பின்வருமாறு கூறுகிறது:   ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்தந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.

இந்திய அரசியல் சாசனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி காஷ்மீருக்கான அரசியல் சாசனம் 17.11.1956ல் இந்த அரசியல் சாசனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957ல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தது.

ஜம்மு-காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும். எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசியலமைப்பை அமைத்துக் கொண்டோம் எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்கு தாங்களே செய்து கொண்டனர்.

சுதந்திர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?. அதன் முகவுரையில் இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26ல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம் என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் இந்திய மக்கள். ஆனால் காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டை குடியுரிமை உடையவர்கள்.

மேற்கண்ட காஷ்மீர் அரசியல் சாசனத்தில் காஷ்மீரின் தேசியக்கொடி எது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை இந்திய அரசியல் சாசனமும் ஒப்புக் கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந்நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கின்றது. 

ஜம்மு-காஷ்மீர்  மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏர் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும்.

இப்போது காஷ்மீரில் இந்திய தேசியக்கொடி ஏற்றும் பிரச்னைக்கு வருவோம்.இந்தியாவின் அரசியல் சாசனப்படி காஷ்மீருக்கான இந்திய தேசியக் கொடி மேலே சொல்லப்பட்டதுதான்.

அதுதான் காஷ்மீரத்துக்கான இந்திய தேசியக்கொடி என்று இந்திய அரசியல் சாசனம் சொல்லும் போது அதை மீறும் வகையில் அரசியல் சாசனத்தைத் காலில் போட்டு மிதித்து விட்டு அந்த மாநிலத்திற்கு எது தேசியக் கொடியாக  இல்லையோ அதைத்தான் நாங்கள் ஏற்றுவோம் என்று ஒருவர் கூறினால் அவர் இந்தியாவின் அரசியல் சட்டத்தை மீறுகிறார். இந்தியாவின் அரசியல் சட்டத்தை மீறுகிறார். இந்தியாவின் அரசியல் சட்டத்தை மீறும் யாரும் தேச விரோதிகளாகத்தான் இருப்பார்களே தவிர ஒருக்காலும் தேசபக்தர்களாக முடியாது.

தேசியக் கொடியை அரசியலாக்கும் கயவர்கள் முஸ்லீம்கள் தேசியக் கொடியை எதிர்க்கிறார்கள் என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்க முயல்கிறார்கள்.

ஆனால் இவர்கள் எது சட்டப்படி காஷ்மீரின் தேசியக் கொடியாக இல்லையோ அதை காஷ்மீரின் தேசியக் கொடி என்று கூறி தேசவிரோதச் செயலைச் செய்கிறார்கள். காஷ்மீருக்கு எது இந்தியாவின் தேசியக் கொடியாக இருக்கிறதோ அதை ஏற்க மறுக்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் தேசவிரோதிகளே என்பதை நிரூபிக்கிறார்கள். இதுபோல்தான் கர்நாடக மாநில ஹூப்லியில் உள்ள ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடி ஏற்ற முயல்வதும் அதை முஸ்லீம்கள் எதிர்க்கும்போது முஸ்லீம்கள் தேசப் பற்று இல்லாதவர்கள் எனச் சித்தரிப்பதும் இவர்களின் வாடிக்கை.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான தனி உடமையான இடத்தில் சங்பரிவாரம் அத்து மீறுகிறது என்பது தான் இங்கே பிரச்சினை. தேசியக் கொடி அல்ல.

அங்கே தேசியக்கொடி ஏற்றுவதன் மூலம் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது அல்ல என்று நிலை நாட்டப் பார்க்கிறார்கள். இந்த அத்துமீறலுக்கு தேசியக் கொடியைக் கேடயமாக ஆக்கி தேசியக்கொடியின் மரியாதையைக் குலைத்த தேசவிரோதிகள் இவர்கள் தான். அத்வானியின் வீடு முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று வழக்கு இருக்கும் போது அத்வானியின் வீட்டுக்குள் புகுந்து முஸ்லிம்கள் தேசியக்கொடி ஏற்றப் போனால் அது தேசியக்கொடி பிரச்னை என்று சங்பரிவாரம் எடுத்துக் கொள்ளுமா? அல்லது அத்வானியின் இடத்தை முஸ்லிம்கள் உரிமை கொண்டாடு கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுமா?

இந்த காவிக்கும்பல் நாட்டில் அமைதியைக் குலைத்து நல்லிணக்கத்தைக் கெடுத்து சிறுபான்மை சமுதாயத்தின் மீது வெறுப்பை விதைப்பதை மட்டுமே ஒரே கொள்கையாக கொண்டுள்ளது. 

இவர்களின் எண்ணம் பலிக்காத வகையில் இதை முஸ்லிமல்லாத மக்கள் மத்தியில் கொண்டு சென்று இவர்களின் தேசவிரோதச் செயலை முறியடிக்க வேண்டும். இதற்காக உழைக்க வேண்டிய அளவுக்கு முஸ்லிம்கள் உழைக்க வேண்டும்.